வாலாஜாபத் கட்டவாக்கம் பகுதியில் புதிய மின்கம்பம் அமைக்க கோரிக்கை

 

வாலாஜாபாத், ஜூலை 10: வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்டது கட்டவாக்கம் ஊராட்சி. இங்கு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் ஊராட்சியில் தொழிற்சாலைகள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன. இந்நிலையில் கட்டவாக்கம் கூட்டு சாலையில் இருந்து சுங்குவார்சத்திரம் செல்லும் சாலையை ஒட்டியுள்ள தொழிற்சாலை எதிரே மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பம் சிதலமடைந்து எலும்புக் கூடாக காட்சியளித்தும், எந்த நேரத்திலும் கீழே விழும் அளவிற்கும் காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் செல்கின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், வாலாஜாபாத் அடுத்த கட்டவாக்கம் கூட்டு சாலையில், இருந்து சுங்குவார்சத்திரம் வரை செல்லும் நான்கு வழிச் சாலையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான கனரக லாரிகள், தொழிற்சாலைகளுக்கு செல்லும் பேருந்துகள், கார், பைக் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக அதிக வேகத்தில் செல்லும் கனரக லாரிகள் செல்லும்போது சாலையை ஒட்டியுள்ள மின்கன்பம் அதிர்ந்து கீழே விழும் சூழலில் உள்ளது. மேலும் அவ்வப்போது இப்பகுதியில் சூறைக்காற்று வீசி வரும் நிலையில் இந்த மின்கம்பம் காற்றில் விழும் அபாய நிலையில் உள்ளதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்தநிலையில் வாலாஜாபாத் மின்வாரியத் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதிய மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: