×

எடப்பாடி தலைமையில் நடந்த மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தை அதிமுக எம்எல்ஏக்கள் கே.பி.அன்பழகன், பி.பாலகிருஷ்ணாரெட்டி புறக்கணித்தனர்: விரைவில் ராஜினாமா செய்ய திட்டமா?

சென்னை: சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் ஈரோடு மாவட்ட அதிமுக நிர்வாகிகளிடம் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில், ஓசூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ பி.பாலகிருஷ்ணா ரெட்டி பங்கேற்காமல் புறக்கணித்தார். இவர் எஸ்.பி.வேலுமணி ஆதரவாளர். இதனால், பாலகிருஷ்ணாரெட்டி வகித்து வந்த கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

அவருக்கு மீண்டும் பதவி வழங்கப்படவில்லை. இதனால் விரக்தியில் இருந்த இவர், எஸ்.வேலுமணியுடன் இணைந்து எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வருகிறார். பாலகிருஷ்ணா ரெட்டி 2026 சட்டமன்ற தேர்தலில் ஓசூர் தொகுதியில் 27,803 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதற்கு முன்னர், 2016 மற்றும் அதற்கு முந்தைய காலகட்டங்களிலும் ஓசூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

இதனிடையே, தர்மபுரி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நேற்று பிற்பகல் நடைபெற்றது. இந்த கூட்டத்தை பாலக்கோடு தொகுதி அதிமுக எம்எல்ஏ கே.பி.அன்பழகன் புறக்கணித்தார். இவர் அதிமுக ஆட்சியில் உயர் கல்வி துறை அமைச்சராக இருந்தவர். இவரும், கட்சி தலைமை மீது அதிருப்தியில் உள்ளார். இந்த நிலையில், பாலகிருஷ்ணாரெட்டி மற்றும் கே.பி.அன்பழகன் ஆகியோர் விரைவில் அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

* ‘ஏஐ’ தெரிந்தால்தான் பதவி
கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் நேற்று எடப்பாடி பழனிசாமி பேசும்போது, தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஐடி விங் மற்றும் பிற சார்பு அணிகள் சரியாக செயல்படவில்லை. தற்போது தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தவர்கள், சமூகவலைதளம் மூலமாகவே கட்சியை வளர்த்து, ஆட்சிக்கும் வந்துவிட்டனர்.

இனி வரும் காலங்களில் சமூகவலைதளம் முக்கிய பிரசார மேடையாக வளர்ந்து வருகிறது, ”அதிமுகவின் வளர்ச்சிக்கும் இனி ‘ஏஐ’ தொழில்நுட்பம் மிகவும் அவசியமான ஒன்றாகி விட்டது. அதனால் இனி ஐஏ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் திறமையான நபர்களுக்குதான் அதிமுக ஐடி விங்க் பிரிவு மற்றும் முக்கிய தகவல் தொடர்பு துறையில் பதவி வழங்கப்படும்” என்றார்.

Tags : AIADMK MLAs ,K.P. Anbazhagan ,P. Balakrishna Reddy ,Edappadi ,Chennai ,AIADMK ,Royapettah, Chennai ,Edappadi Palaniswami ,Krishnagiri, Dharmapuri ,Erode ,Hosur ,AIADMK MLA ,
× RELATED திருமா பேசியது என்னை தூக்கி வாரி...