சமூக விரோதிகள் அச்சமின்றி சுற்றி திரிகின்றனர்; தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது…

சென்னை: சமூக விரோதிகள் அச்சமின்றி சுற்றி திரியும் அளவிற்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள டிடிவி தினகரன், சென்னை கே கே நகர் கன்னிகாபுரம் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கத்தியுடன் சுற்றித் திரிந்த ரவுடியை பிடிக்க முயன்ற காவல் உதவி ஆய்வாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக குறிப்பிட்டு உள்ளார்.

தவிர சேலம் தலைவாசல் அருகே வீட்டிற்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்த திமுக நிர்வாகி கொலை, சென்னை வால்டாக்ஸ் சாலையில் இளைஞர் குத்திக் கொலை, விருதுநகர் அருகே சிறுமி மீது காரை ஏற்றிக் கொலை செய்ய முயற்சி, தருமபுரி பேருந்து நிலையத்தில் பெண் ஒருவரின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சி என தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் குற்றச் சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக கவலை தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டிய அரசு நிர்வாகம், ரீல்ஸ் கண்டெண்டை தேற்றுவதிலும், பொய் செய்திகளை வித விதமாக எடிட் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதிலுமே தன் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறது. இதனால் சமூக விரோதிகள் எந்தவித அச்சமுமின்றி சுதந்திரமாகச் சுற்றித்திரியும் அளவிற்கு தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது.

எனவே, காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கிய ரவுடி மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, குற்றச் செயல்களைத் தடுப்பதற்கும், ரவுடிகளை கட்டுப்படுத்துவதற்கும் தமிழக காவல்துறைக்கு தேவையான அதிகாரத்தை வழங்கி அவர்கள் முழு சுதந்திரத்துடன் செயல்பட அனுமதி வழங்க வேண்டும் என தவெக அரசை வலியுறுத்தி உள்ளார்.

Related Stories: