கரூரில் 41 பேர் பலியான விவகாரத்தில் சர்ச்சை பேச்சு; விஜய், ஆதவுக்கு எதிராக தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

புதுடெல்லி: கரூரில் 41 பேர் பலியான விவகாரத்தில் விஜய், ஆதவ்வுக்கு எதிராக தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்துள்ள நிலையில் இடையீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கரூரில் நடிகரும், தற்போதைய முதல்வருமான தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான வழக்கு, உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு நீதிபதியான அஜய் ரஸ்தோகியின் நேரடி கண்காணிப்பில் சிபிஐ அதிகாரிகள் நடத்தி வருகின்றனர்.

இதுபோன்ற சூழலில் தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் பேசுகையில்,
‘எங்களுக்கு கரூர் கணக்கு ஒன்று உள்ளது. அதனை முடிக்காமல் விட மாட்டோம். சட்டம் தனது கடமையை செய்யும். கரூரில் கூட்ட நெரிசலை காவல்துறையை வைத்து உருவாக்கினார்கள். கரூர் சம்பவத்திற்கு காவல்துறையையும், திமுகவும் தான் முக்கிய காரணமாக இருந்தனர்’ என்று தெரிவித்திருந்தார். இவரது பேச்சு மிகப்பெரிய சர்ச்சையாகியது. இதைத்தொடர்ந்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்றை கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக தாக்கல் செய்திருந்தார்.

குறிப்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை விவகாரம் தொடர்பாக செல்வாக்கு செலுத்துதல், சாட்சிகளை மிரட்டுதல் மற்றும் விசாரணைக்குத் தடையாக இருத்தல், பொது அறிக்கைகள் வெளியிட்டது ஆகிய அனைத்தையும் அடிப்படையாக கொண்டு புகார் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். மேலும் அந்த வழக்கில் விசாரணை வளையத்தில் இருக்கும் முதல்வர் ஜோசப் விஜய், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, என்.ஆனந்த், சி.டி.ஆர் நிர்மல் குமார் ஆகிய அனைவரும் பொதுவெளியில் கரூர் சம்பவம் தொடர்பாக எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்க கூடாது என்று தடை விதிக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது இன்று உச்ச நீதிமன்றத்தில் கே.வி.விஸ்வநாதன் மற்றும் அலோக் அராதே ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என்று தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், மேற்கண்ட வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்வதாக கோரிக்கை வைத்தார். இதைத்தொடர்ந்து அதனை ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள், கரூர் விவகாரத்தில் திமுக தொடர்ந்த இடைக்கால மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

வழக்கறிஞர் வில்சன் பேட்டி
உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்து வழக்கறிஞர் வில்சன் அளித்த பேட்டியில், ‘கரூர் விவகாரத்தை எங்களது தரப்பு சட்டப் போராட்டம் தொடரும். குறிப்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியது சட்டத்திற்கு புறம்பானது என்றால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம். அதனை தனியாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியும். அதற்கு எந்தவித தடையும் கிடையாது. குறிப்பாக கரூர் விவகாரத்தில் மூன்று பேர் கொண்ட கமிட்டிக்கு அனைத்து அதிகாரமும் உள்ளது என்பதால், எங்களது தரப்பு மனுவை விசாரணைக்கு ஏற்க மறுக்கப்பட்டுள்ளது. மேலும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும். குறிப்பாக கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சாட்சிகளை கலைக்க கூடாது என்பது தான் முக்கிய சாராம்சமாக உள்ளது. எனவே இந்த விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்வது குறித்து ஆலோசித்து வழக்கு தொடருவோம்’ என்றார்.

Related Stories: