நிலத்தடி நீரை பயன்படுத்தி குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும்

 

நாகப்பட்டினம், ஜூலை 8: திருமருகல் வட்டாரத்தில் டீசல் இன்ஜின் மூலம் நிலத்தடி நீரை பயன்படுத்தி குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். காவிரி டெல்டா மாவட்ட பாசனத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும். ஆனால் நடப்பு ஆண்டு பாசனத்திற்கு தமிழக அரசு தண்ணீர் திறந்து விடவில்லை. இதனால் இந்த ஆண்டு குறுவை சாகுபடி பொய்த்து போய் உள்ளது. இந்நிலையில் டெல்டா மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் டீசல் இன்ஜின் மூலம் நிலத்தடி நீரை பயன்படுத்தி குறுவை சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் எரிபொருள்கள் விலை உயர்வு காரணமாக விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருமருகல் ஒன்றியத்தில் உள்ள முடிகொண்டான் ஆறு, திருமலைராஜன் ஆறு, அரசலாறு, தெற்கு புத்தாறு, வடக்கு புத்தாறு, நரிமேனி ஆறு, வளப்பாறு உள்ளிட்ட ஆறுகளில் இதுவரை காவிரி பாசன தண்ணீர் வந்து சேரவில்லை. இந்த ஆறுகளில் இருந்து பிரிந்து செல்லும் நூற்றுக்கணக்கான கிளை வாய்க்கால்களிலும் பாசனத்துக்கு தண்ணீர் வரவில்லை. இதனால், வாய்க்கால் பாசனத்தை நம்பியிருந்த விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். இந்நிலையில் திருமருகல் பகுதியில் உள்ள அம்பல், பொறக்குடி, கொங்கராயநல்லூர், ஆலத்தூர், திருப்புகலூர், போலகம், சேஷமூலை, திருக்கண்ணபுரம், புத்தகரம் உள்ளிட்ட கிராமங்களில் மின்மோட்டார் மற்றும் டீசல் இன்ஜின்களைப் பயன்படுத்தி, குறுவை சாகுபடி பணியில் விவசாயிகள் கடும் சிரமத்திற்கிடையே ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் அடிக்கடி மின் தடை காரணமாக மின் மோட்டார்களை பயன்படுத்தி நிலத்தடி நீரை இறைப்பதும் விவசாயிகளுக்கு கஷ்டமாக உள்ளது. எனவே மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து திருமருகல் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில்: குறுவை சாகுபடிக்கு வாய்க்கால் பாசனத்தை நம்பி இது நாள் வரை காத்திருந்தும் இதுவரை தண்ணீர் வரவில்லை. இதனால் மின்மோட்டார், டீசல் இன்ஜின் ஆகியவற்றை பயன்படுத்தி நிலத்தடி நீர் மூலம் குறுவை சாகுபடியில் ஈடுபட்டு வருகிறோம். அடிக்கடி ஏற்படும் மின்தடையால் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் தடை ஏற்படுகிறது. இதேபோல் டீசல் இன்ஜினை பயன்படுத்தும் விவசாயிகள் அதிக விலை கொடுத்து டீசல் வாங்க வேண்டிய நிலை உள்ளது.

ஏற்கனவே மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் வரவில்லை. பயிர் கடன் தள்ளுபடியில் ஏமாற்றம், மின்தடை, எரிபொருள் தட்டுப்பாடு என பல்வேறு சிரமத்தை விவசாயிகள் அடைந்துள்ளனர். இருப்பினும் மனம் தளராமல் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி நடப்பு ஆண்டில் குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டியுள்ளது. எனவே தடையில்லாமல் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். டீசல் இன்ஜின்களை இயக்க மானிய விலையில் விவசாயிகளுக்கு டீசல் வழங்க வேண்டும். மீனவர்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்குவது போல் டீசல் இன்ஜின் பயன்படுத்தும் விவசாயிகளை கண்டறிந்து அவர்களுக்கும் மானிய விலையில் டீசல் வழங்கி குறுவை சாகுபடியை ஊக்குவிக்க வேண்டும் என்றனர்.

Related Stories: