கெங்கவல்லியில் தாயை அடித்துக்கொன்ற அரசு அதிகாரி கைது

ஆத்தூர் : கெங்கவல்லியில் குடும்பத்தகராறில் தென்னை மட்டையால் சரமாரி தாக்கப்பட்ட மூதாட்டி படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், கொலை வழக்காக மாற்றி நெடுஞ்சாலைத்துறை ஆய்வாளரான அவரது மகனை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகேயுள்ள சாத்தப்பாடி மேற்கு காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி சிவகாமி (65). இவர்களது மகன் பூமாலை (40), நெடுஞ்சாலைத் துறையில் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி தமிழரசி (38). தங்கவேல்-சிவகாமி தம்பதியினர் பூமாலை குடியிருக்கும் வீட்டிற்கு அருகிலேயே வசித்து வந்தனர். கடந்த மாதம் 21ம் தேதி மாலை, சிவகாமி மற்றும் தமிழரசி ஆகியோரிடையே வீட்டிற்கு அருகில் துணி துவைக்கும் கடப்பா கல் போடுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது, ஒருவரையொருவர் மாறி மாறி ஆபாசமாக தகாத வார்த்தையால் திட்டிக்கொண்டனர். அப்போது, வேலைக்கு சென்று விட்டு, வீட்டுக்கு வந்த பூமாலை இருவரையும் சமரசம் செய்துள்ளார்.

ஆனால், தொடர்ந்து வாக்குவாதம் செய்தவாறு இருந்ததால், ஆத்திரமடைந்த பூமாலை அருகில் கிடந்த தென்னை மட்டையை எடுத்து, தாய் சிவகாமியை சரமாரி தாக்கினார். மேலும், கீழே தள்ளி விட்டார். இதில், மண்டை உடைந்து படுகாயமடைந்த சிவகாமி, ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதனை அறிந்து கெங்கவல்லியில் வசித்து வரும் சிவகாமியின் மகள் கலைச்செல்வி, சாத்தப்பாடி விரைந்து வந்து, படுகாயமடைந்த தாய் சிவகாமியை மீட்டு, ஆத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து கடந்த 26ம் தேதி, கெங்கவல்லி காவல் நிலையத்தில் கலைச்செல்வி கொடுத்த புகாரின்பேரில், பூமாலை மீது கொலை முயற்சி வழக்குப்பதிந்து, போலீசார் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை சிவகாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, பூமாலை மீதான கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி கைது செய்தனர். பின்னர், ஆத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி, நீதிபதி உத்தரவின்பேரில், சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: