*மருத்துவமனையில் அனுமதி தவெக நிர்வாகி மீது புகார்
நாமகிரிப்பேட்டை : நாமகிரிப்பேட்டை அருகே வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக, தவெக நிர்வாகியான கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அவரது மனைவி போலீசில் புகாரளித்துள்ளார்.நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகேயுள்ள சின்னகாக்காவேரி புதுகாலனியைச் சேர்ந்த மீனா என்பவர், தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி, தாக்கியதாக போலீசில் புகாரளித்துள்ளார்.
தாக்குதலில் காயமடைந்த அவர் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தில் மீனா தரப்பில் அளித்துள்ள புகாரில் தெரிவித்ததாவது:
நாமகிரிப்பேட்டை அடுத்த சின்னகாக்காவேரி புது காலனியைச் சேர்ந்த ஜெகதீஷ்குமார் (35). சொட்டு நீர் பாசன அமைக்கும் தொழிலில் ஈடுபட்டு வருவதுடன், தமிழக வெற்றிக் கழகத்தின் சீராப்பள்ளி பேரூர் துணைச் செயலாளராக உள்ளார்.
நாங்கள் இருவரும் காதலித்து, பெற்றோரின் சம்மதத்துடன் 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு 12 மற்றும் 6 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இரண்டாவது பெண் குழந்தை பிறந்ததிலிருந்து, ஆண் வாரிசு இல்லை என்பதை காரணமாகக் கூறி, கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் என்னை துன்புறுத்தி வந்தனர்.
மேலும், திருச்செங்கோடு அம்மாசிபாளையம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன், எனது கணவர் நெருங்கிய தொடர்பில் இருக்கிறார். அவரை வீட்டிற்கே அழைத்து வந்து, என்னை அவமதித்து கொடுமைப்படுத்துகிறார்.
இதுகுறித்து மாமனார், மாமியாரிடம் முறையிட்டபோது, இதில் எங்களுக்கு சம்பந்தமில்லை. ரூ.2 லட்சம் பணம் கேட்டபோது நீ தரவில்லை. இனி இந்த பிரச்னையை எங்களிடம் கொண்டு வர வேண்டாம் என்று கூறி விட்டனர்.
எனது கணவர் அரசியல் கட்சியில் பொறுப்பில் இருப்பதால், புகார் அளித்தும் இதுவரை போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், தற்போது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறேன். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் மற்றும் சிங்கப்பெண் போலீசிலும் புகாரளித்துள்ளேன். எனக்கும், எனது 2 மகள்களுக்கும் உரிய நீதி கிடைக்க வேண்டும். இவ்வாறு அவர் புகாரில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மீனா, நிருபர்களிடம் கூறுகையில், `கட்சியின் பெயரை பயன்படுத்தி, என்னை மிரட்டுவதை விஜய் கண்டிக்க வேண்டும். எனக்கும், என் மகள்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும்.
இல்லையெனில் நானும் எனது 2 மகள்களும் தற்கொலை செய்து கொள்வோம். எனது பணம், நகைகள் அனைத்தையும் பெற்றுக்கொண்டு வரதட்சணை கொடுமை செய்கின்றனர். எனது கணவர், அவரது குடும்பத்தினர் மற்றும் கணவருடன் தொடர்பில் உள்ள பெண் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றார்.
