ரோட்டில் சடலத்துடன் உறவினர்கள் மறியல்
*மதுரை அரசு மருத்துவமனையில் பரபரப்பு
மதுரை : மதுரை அரசு மருத்துவமனை பிணவறைக்கு கொண்டு வந்த வாலிபர் உடலை சாலையில் வைத்து குடும்பத்தினர் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றதில் இளைஞர் உயிரிழந்தாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் புதூர் பகுதியை சேர்ந்தவர் நந்தகோபால். இவரது மகன் சீமைராஜா (22) மீது பல்வேறு காவல்நிலையங்களில் பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.
3 நாட்கள் முன்பு சீமைராஜாவை தனிப்படை போலீசார் அவரது வீட்டிற்கு தேடிச் சென்றுள்ளனர், அங்கு சீமைராஜா இல்லாததால் திரும்பி வந்துள்ளனர். இந்நிலையில், சீமைராஜா, தனது நண்பர் சூர்யாவுடன் (22) டூவீலரில் சென்ற போது, மதுரை மாவட்டம் மேலூர் அருகே சாலைத்தடுப்பில் மோதிய விபத்தில் சீமைராஜா உயிரிழந்தாகவும், சூர்யா கையில் காயமடைந்த நிலையில் சிகிச்சையில் இருப்பதாகவும் சீமைராஜாவின் குடும்பத்தினருக்கு மேலூர் போலீசார் நேற்று காலை தகவல் அளித்துள்ளனர்.
இதனிடையே, சீமைராஜாவின் உடல் மேலூர் மருத்துவமனையில் இருந்து நேற்று காலை மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சீமைராஜா குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வந்தனர்.
சீமைராஜா உடலை பிணவறைக்கு கொண்டு செல்ல விடாமல், ஆம்புலன்சை தடுத்து மருத்துவமனை பிணவறை அருகில் சாலை முன்பாக ஸ்ட்ரெட்சருடன் உடலை கீழே இறக்கி ரோட்டில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சீமைராஜா இறப்பில் போலீசார் மீது சந்தேகம் இருப்பதாக கூறி அவர்கள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மறியல் தொடர்ந்த நிலையில், 20க்கும் மேற்பட்டோரை கைது செய்து வேனில் ஏற்றி, மதிச்சயம் காவல்நிலையம் கொண்டு சென்றனர். 20 நிமிடத்திற்கும் மேலாக நடந்த மறியலுக்கு பிறகு, ஆம்புலன்சில் ஏற்றி பிணவறைக்கு சீமைராஜா உடல் கொண்டு செல்லப் பட்டது. இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சீமைராஜா குடும்பத்தினர் கூறுகையில், ‘‘காவல்நிலையங்களில் சீமைராஜா மீது சில வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. அவரைத் தேடி வீட்டிற்கு திருப்புவனம் போலீசார் வந்தனர். வீட்டில் இல்லாததால், வந்ததும் அழைத்து வாருங்கள் எனக்கூறி சென்று விட்டனர்.
திடீரென தற்போது சீமைராஜா விபத்தில் இறந்து விட்டதாக போலீசார் கூறுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. போலீசார் சீமைராஜாவை கண்டுபிடித்து விசாரணைக்கு அழைத்துச் சென்று அடித்ததில் அவர் இறந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சீமைராஜாவுடன் வந்த அவரது நண்பர் சூர்யாவிற்கு காயம் ஏற்பட்டு, மேலூர் மருத்துவமனையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
அவரை சந்திக்கவும் அனுமதிக்கவில்லை. விபத்து பலி என்றால் மேலூர் அரசு மருத்துவமனையிலேயே பிரேத பரிசோதனை நடத்தி இருக்கலாம். அங்கிருந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு சீமைராஜாவின் உடலை கொண்டு வந்ததும் சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறது. உயர் அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதுவரை சீமைராஜா உடலை பெற மாட்டோம்’’ என்றனர்.சிவகங்கை மாவட்ட போலீசில் ஏற்கனவே மடப்புரம் அஜித்குமார், மானாமதுரை ஆகாஷ் என அடுத்தடுத்து காவல்நிலைய விசாரணை உயிரிழப்புச் சம்பவங்கள் நடந்து பரபரப்பை ஏற்படுத்தின. தற்போது மானாமதுரை காவல்நிலைய எல்கைக்கு உட்பட்ட தனிப்படை போலீசார் மீது மீண்டும் குற்றச்சாட்டு வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எஸ்பி அலுவலகம் விளக்கம்
மதுரை மாவட்ட எஸ்பி அலுவலக அறிக்கையில், ‘‘திருப்புவனம் சீமைராஜா, தனது நண்பர் ராமநாதபுரம் கமுதியை சேர்ந்த சூர்யாவுடன் 5ம் தேதி அதிகாலை டூவீலரில், திருப்பத்தூர் – மேலூர் நான்கு வழிச்சாலையில் வந்தபோது, நிலைதடுமாறி சாலையின் தடுப்புச்சுவரில் மோதியுள்ளனர். இவ்விபத்தில் இருவரும் காயமடைந்து மேலூர் அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டதில், சீமைராஜா வரும் வழியில் இறந்தது தெரிந்தது. சூர்யா சிகிச்சை பெற்று வருகிறார்.
சீமைராஜாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு மதுரை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட போது, இறப்பிற்கு போலீசாரே காரணம் எனக்கூறி அங்கு உறவினர்கள் சாலை மறியல் நடத்தியுள்ளனர். நடந்த சம்பவம் குறித்து தெளிவாக போலீசார் எடுத்து கூறி, காயமடைந்த சூர்யாவிடமும் பேசினர்.
உறவினர்கள் வாகன விபத்துக்கு நடவடிக்கை கோரி மனு அளித்தனர்.இதன்பேரில் மேலூர் காவல் நிலையத்தில் வாகன விபத்து பதிவு செய்து, விசாரணை நடந்து வருகிறது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
