நடப்பு உலக கோப்பை தொடரை இணைந்து நடத்தி வரும் கனடா, மெக்சிகோ, அமெரிக்காவை சேர்ந்த அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது அந்நாடுகளின் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன. ரவுண்ட் ஆப் 16ல் மொராக்கோ அணியிடம் 0-3 என்ற கோல் கணக்கில் கனடா மண்ணைக் கவ்விய நிலையில், அடுத்து மெக்சிகோ 2-3 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்திடம் போராடி தோற்று காலிறுதி வாய்ப்பை பறிகொடுத்துள்ளது.
மெக்சிகோ சிட்டியில் நடந்த இப்போட்டியில், இங்கிலாந்து தரப்பில் ஜூட் பெல்லிங்காம் 2 கோல் (36வது மற்றும் 38வது நிமிடம்), கேப்டன் ஹாரி கேன் ஒரு கோல் (60’ பெனால்டி) போட்டனர். மெக்சிகோ சார்பில் ஜூலியன் குயினோன்ஸ் (42’), ரவுல் ஜிமெனஸ் (69’ பெனால்டி) கோல் அடித்தனர். 54வது நிமிடத்தில் இங்கிலாந்தின் ஜாரெல் குவான்சா சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டதால் 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
* மிக இளம் வயதில் 10 போட்டி சாதனை
மெக்சிகோ அணிக்கு எதிரான ரவுண்ட் ஆப் 16 போட்டியில் இங்கிலாந்தின் ஜூட் பெல்லிங்காம் ஆட்ட நாயகன் விருது பெற்றார். மிக இளம் வயதில் 10 உலக கோப்பை ஆட்டங்களில் விளையாடிய வீரர் என்ற சாதனை பெல்லிங்காம் (23 வயது, 6 நாள்) வசமாகி உள்ளது. முன்னதாக 1978ல் அர்ஜென்டினாவின் மரியோ கெம்பஸ் (23 வயது, 334 நாள்) போலந்துக்கு எதிராக இந்த சாதனையை நிகழ்த்தி இருந்தார்.
* டிரம்ப் தலையீட்டால் பலோகன் தடை நீக்கம் சர்ச்சையில் சிக்கிய பிபா
போஸ்னியா அணிக்கு எதிரான ரவுண்ட் ஆப் 32 ஆட்டத்தில் அமெரிக்க வீரர் பலோகனுக்கு சிவப்பு அட்டை காட்டப்பட்டது. பிபா விதிமுறைகளின்படி நடுவர் முடிவை எதிர்த்து அப்பீல் செய்ய முடியாது என்பதால், அடுத்தடுத்த போட்டிகளில் அவர் களமிறங்குவது கேள்விக்குறியானது.
ஒழுங்குமுறை கமிட்டியின் முடிவுக்காக காத்திருந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் தனிப்பட்ட முறையில் ஃபிபா தலைவர் இன்பாண்டினோவிடம் பேசியதை அடுத்து, பலோகன் மீதான் தடை நீக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளுக்கு புறம்பாக அரசியல் தலையீட்டுக்குப் பணிந்து ஒரு வீரர் மீதான தடையை நீக்குவதா என சர்ச்சை வெடித்துள்ளது.
