சுற்றுலா பயணிகளை கவரும் சைக்ளோமென் மலர் அலங்காரம்

 

ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர்கள் இல்லாத நிலையில் கண்ணாடி மாளிகையில் வைக்கப்பட்டுள்ள சைக்ளோமென் மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் 90 சதவீதம் பேர் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவிற்கு செல்கின்றனர். எனவே, சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில் பூங்காவில் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அதில்,மலர்கள் பூத்து காணப்படும். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது வாடிக்கை. குறிப்பாக, கோடை காலங்களில் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகிளை மகிழ்விக்கும் பொருட்டு பூங்காவை தயார் செய்யப்படும்.

இந்நிலையில் முதல் சீசன் முடிந்த நிலையில், தற்போது இரண்டாம் சீசனுக்காக பூங்கா தயார் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இதனால், பூங்காவில் உள்ள அனைத்து மலர் செடிகளும் அகற்றப்பட்டது. தற்போது விதைப்பு பணிகள் மற்றும் நாற்று உற்பத்தியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். பூங்காவில் மலர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால், பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதேசமயம், பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில் மட்டும் தொட்டிகளில் பல்வேறு மலர் செடிகள் கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, பால்சம், பிகோனியோ,சைக்ளோமென் போன்ற மலர் தொட்டிகளை கொண்டு மலர் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. மலர்களே இல்லாத பூங்காவில், கண்ணாடி மாளிகையில் உள்ள மலர்களை கண்டு சுற்றுலா பயணிகள் ரசித்து செல்கின்றனர். வரும் செப்டம்பர் மாதம் வரை ஊட்டி தாவரவியல் பூங்கா பாத்திகள் மற்றும் தொட்டிகளில் மலர்களை காண முடியாத நிலையில், கண்ணாடி மாளிகையில் உள்ள மலர் அலங்காரம் மட்டுமே சுற்றுலா பயணிகள் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

Related Stories: