கொடுமுடியில் ஆக்கிமிப்பு அகற்றத்தின் போது இடிக்கப்பட்ட கட்டிட கழிவுகள் அகற்றாததால் சுகாதாரகேடு: பொதுமக்கள் குற்றச்சாட்டு

 

 

கொடுமுடி: கொடுமுடியில் 2 ஆண்டுக்கு முன்பு இடிக்கப்பட்ட கட்டிட கழிவுகள் அகற்றாததால் சுகாதாரசீர்கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர். ஈரோடு மாவட்டம் கொடுமுடி பேரூராட்சிக்குட்பட்ட மகுடேஸ்வரர் கோயில் எதிர்புறமுள்ள பகுதியில் இருந்து அண்ணா நகர் வரை உள்ள நீர்வளத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் மற்றும் கடைகள் சுமார் 2 ஆண்டுக்கு முன்பு உச்சநீதிமன்ற ஆணையின்படி இடிக்கப்பட்டது. இதனால் இடிக்கப்பட்ட கட்டிடங்களின் கற்கள், கான்கிரீட் சிதிலங்கள் மற்றும் பிற கட்டுமானக் கழிவுகள் அப்பகுதியிலேயே குவித்து வைக்கப்பட்டுள்ளது.

தற்போது சுமார் 2 ஆண்டுகள் கடந்தும் அவை அகற்றப்படாததால் புதர்கள் வளர்ந்து, பாம்பு, தேள் உள்ளிட்ட விஷஜந்துக்கள் வசிக்கும் இடமாக மாறியுள்ளது. மேலும், மழைக்காலங்களில் கழிவுகளுக்கு இடையே தண்ணீர் தேங்கி கொசுக்கள் பெருகுவதால் சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயமும் அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், முதியோர் மற்றும் பள்ளி மாணவர்கள் அச்சத்துடன் நடமாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலால் பக்தர்கள் அவதி: கொடுமுடி மகுடேஸ்வரர் கோயிலை தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி, திருவிழா உள்ளிட்ட விசேஷ நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தருவதால், வாகனங்களை நிறுத்த போதுமான இடம் இல்லாமல் சிரமம் ஏற்படுகிறது.இந்நிலையில், கோயில் முன்பகுதியில் சுமார் 2 ஆண்டுக்கு முன்பு அகற்றப்பட்ட ஆக்கிரமிப்பு கட்டிடங்களின் கான்கிரீட் சிதிலங்கள், கற்கள் உள்ளிட்ட கட்டுமானக் கழிவுகள் இன்னும் அகற்றப்படாமல் கிடக்கின்றன. மேலும், இந்தக் கட்டிடக் கழிவுகள் அகற்றப்பட்டு அந்த இடம் சீரமைக்கப்பட்டால், கோயிலுக்கு வரும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு போதுமான வசதி ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது இடவசதி இல்லாததால், குறிப்பாக விசேஷ காலங்களில் பக்தர்கள் தங்களது வாகனங்களை சாலையோரங்களில் நிறுத்த வேண்டிய நிலை உள்ளது. இதனால் கொடுமுடி-ஈரோடு, கரூர் சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, 2 ஆண்டுகளாக அகற்றப்படாமல் கிடக்கும் ஆக்கிரமிப்பு கட்டிடக் கழிவுகளை உடனடியாக அகற்றி, அப்பகுதியை தூய்மைப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: