வேதாரண்யம் தாலுகாவில் கடலை சாகுபடியில் வினோத நோய் தாக்குதலால் விவசாயிகளுக்கு நஷ்டம்

 

வேதாரண்யம், ஜூலை 3: வேதாரண்யம் தாலுகாவில் சுமார் 2,500 ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி ஆண்டுதோறும் நடைபெறுகிறது. வழக்கமாக சீசன் காலமான ஜனவரி மாதத்தில் பெரும்பாலான விவசாயிகள் ஒரே நேரத்தில் கடலை சாகுபடி ஈடுபடுவார்கள். மூன்று மாத சாகுபடியான இந்த கடலை சாகுபடி முடிந்தவுடன் விவசாயிகள் கார்கால பருவ சாகுபடியாக மீண்டும் வயல் மற்றும் திடல் பகுதிகளில் கடலை சாகுபடி மேற்கொண்டு வருவார்கள். சீசன் காலத்தில் அதிகமாக விளைச்சல் காணப்படும் போது சரியான விலை இருக்காது.

அப்பொழுது 40 கிலோ கொண்ட காய்ந்த கடலை ரூ.3000-க்கு விற்பனையாகும். கடலை தழை ஒரு கட்டு 400 முதல் 500 வரை விற்பனையாகும். அதே நேரத்தில் தற்போது போடப்பட்டுள்ள கடலை சாகுபடியில் 60 நாளில் கடுமையான வெள்ளை மாவு பூச்சி தாக்குதல் காணப்படுகிறது. வழக்கமாக இந்த பூச்சி தாக்குதல் இலை பகுதி மட்டுமே காலங்காலமாக தாக்கி வந்தது. ஆனால் தற்போது வித்தியாசமாக மண்ணுக்கடியில் விளையும் கடலையில் இந்த பூச்சி தாக்குதல் அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் கடலை அடியோடு பாதிக்கப்பட்டு கடலைத் தரமற்றதாகவும், செடிகள் காய்ந்து சருகாக போய் விடுகிறது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

இந்தக் கடலை சாகுபடியில் இலை புள்ளி நோய், வெள்ளைப் பூஞ்சான் நோய் தாக்குதல் பரவலாக காணப்படும். ஆனால் தற்போது காணப்படும் வெள்ளை நோய் பூச்சு தாக்குதல் விவசாயிகளை அதிர்ச்சி அடைய செய்ய உள்ளது. இந்த பூச்சி தாக்குதலுக்களுக்கு உள்ளான கடலையை வியாபாரிகள் வாங்குவதில்லை. இதனால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். வழக்கமாக தொடர்ந்து சாகுபடி அதிக அளவில் செய்யும் முதல் பட்ட சாகுபடிக்கு மட்டும் காப்பீடு செய்யப்படுகிறது. ஆனால் இரண்டாவது முறையாக இந்த மாதத்தில் செய்யப்படும் சாகுபடிக்கு காப்பீடு கிடையாது. காப்பீடு இருந்தால் கூட ஓரளவு விவசாயிகள் தங்களை காப்பாற்றிக் கொள்வார்கள்.

காப்பீடு இல்லாமல் நோய் தாக்குதலை சமாளிக்கவும் முடியாமல் விவசாயிகள் பெருத்த நட்டத்திற்கு ஆளாகியுள்ளனர். உடனடியாக தோட்டக்கலைத் துறையினர் இந்த பூச்சி தாக்குதலை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும் என கடலை விவசாயிகள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

 

Related Stories: