சீர்காழி நகராட்சியில் குப்பை கிடங்கு தீயின் புகை மண்டலத்தால் 3 நாட்களாக பொதுமக்கள் திணறல்

 

சீர்காழி, ஜூலை 2: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானிய தெருவில் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கில் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளிலும் உள்ள வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், உணவக விடுதி உள்ளிட்டவைகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்காமல் கொட்டப்பட்டு வருகிறது. இதன் காரணமாக குப்பை கிடங்கில் குப்பைகள் மலை போல் குவியல் குவியலாக காட்சியளிக்கிறது. இந்தநிலையில் கடந்த 29ந்தேதி மாலை நேரத்தில் மர்ம நபர்கள் குப்பை கிடங்கில் தீ வைத்ததாக தெரிகிறது. இந்த தீ மளமளவென அனைத்து பகுதிகளிலும் பற்றி எரியத் தொடங்கியது. இதனால் இந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

இதன் காரணமாக குப்பை கிடங்கு அருகில் உள்ள கோவிந்தராஜ் நகர், ஈசானிய தெரு, பிச்சைக்காரன் விடுதி, மனவெளி திடல், சர்க்கார் தெரு, கோயில் சேர்த்தி தெரு, கேபிஎஸ் நகர், அருந்ததி தெரு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கடந்த மூன்று நாட்களாக புகை மூட்டத்தால் மூச்சு திணறி கடும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர். சீர்காழி தீயணைப்பு நிலைய வீரர்கள் மூன்று நாட்களாக தீயை அணைக்க போராடி வருகின்றனர். ஆனால் தீயை முழுமையாக அணைக்க முடியவில்லை. இந்த நிலையில் நேற்று அதிமுக ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் பொறியாளர் மார்கோனி தலைமையில் அதிமுக நகர செயலாளர் சுரேஷ், நகர் மன்ற உறுப்பினர்கள் ரமாமணி, கிருஷ்ணமூர்த்தி, ராஜேஷ், நகர அதிமுக பொருளாளர் மற்றும் செந்தில்குமார், மதிவாணன் மலையப்பன் ராஜசேகர் வெற்றிலை முருகன் உள்ளிட்ட ஏராளமானோர் குப்பை கிடங்கிற்குள் சென்று ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர்.

அப்பொழுது அங்கு வந்த நகராட்சி ஆணையர் சசிகுமார் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஆர்ப்பாட்டம் செய்யக்கூடாது. யாரைக் கேட்டு உள்ளே வந்தீர்கள் என தெரிவித்தார். இதனால் நகராட்சி ஆணையருக்கும் பொது மக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சீர்காழி குப்பை கிடங்கு முன்பு புளிச்சக்காடு சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது மூன்று நாட்களாக எரியும் குப்பையை அணைக்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு மருத்துவ வசதி செய்து தர வேண்டும். குப்பைகளை தரம் பிரித்து குப்பை கிடங்கிற்கு எடுத்து வர வேண்டும். குப்பை கிடங்கு முழுவதும் பற்றி எரியும் தீயை முழுமையாக அணைக்க வேண்டும். வரும் காலங்களில் இது போன்ற சம்பவம் நடக்க கூடாது உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இது குறித்த தகவல் அறிந்த சீர்காழி இன்ஸ்பெக்டர் கமல்ராஜ், நகராட்சி ஆணையர் சசிகுமார் மற்றும் போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்பொழுது கூடுதல் தீயணைப்பு நிலைய வாகனம் மற்றும் தனியார் டேங்கர் லாரி ஆகியவற்றை கொண்டு வந்து தீயை முழுமையாக அணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்ததன் பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள். சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் சீர்காழி -புளிச்சக்காடு இடையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

Related Stories: