சென்னை: எடப்பாடி பழனிசாமி வழங்கிய கட்சி பதவிகளை ஏற்க இயலாது. கட்சி உறுப்பினர்களாக மட்டுமே செயல்படுவோம் என்று நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட 8 அதிமுக எம்எல்ஏக்கள் மீண்டும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதுகுறித்து அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்கள் நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, கே.பி.அன்பழகன், கே.சி.வீரமணி, அருண்மொழிதேவன், பாலகிருஷ்ணரெட்டி, எஸ்.எம்.சுகுமார் மற்றும் முன்னாள் எம்எல்ஏ கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக போட்டியிட 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றோம். சி.வி.சண்முகத்துக்கு எந்த பதவியும் வழங்கப்படாமல் ஒதுக்கி வைத்தது ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை. ஆனாலும் 22 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் கடிதத்தை திரும்ப பெற்றுக் கொண்டோம். அதேபோல் நீங்களும் 25 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் கடிதத்தை திரும்ப பெற்றுக் கொண்டீர்கள்.
அப்போது ஏற்படுத்திக்கொண்ட சமரச உடன்படிக்கையின்படி 13.5.2026 அன்று கட்சி பொறுப்புகளில் விடுவிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் மீண்டும் அவரவர் வகித்து வந்த பதவிகளில் நியமிக்கப்படவில்லை. மீண்டும் அவர்கள் வகித்து வந்த பதவியை வழங்காததால் குறிப்பாக கடந்த 50 நாட்களாக அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் சாரை சாரையாக கட்சியில் இருந்து விலகி தவெக-வில் தங்களை இணைத்துக் கொண்டு வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளராகிய நீங்கள் எங்களுக்கு உறுதி அளித்தபடி மீண்டும் தலைமை ஏற்று இணைந்த பின்பும், அவர்கள் ஏற்கனவே வகித்து வந்த பதவிகளில் நியமிக்கப்படாமல் காலதாமதம் செய்ததோடு தங்கள் விருப்பப்படி பொறுப்புகளை நியமித்து 25.6.2026 அன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, நாங்கள் யாவரும் தாங்கள் வழங்கியுள்ள கட்சி பதவிகளை ஏற்று கழக பணிகளில் எங்களை ஈடுபடுத்திக்கொள்ள இயலாத சூழ்நிலையை நீங்கள் உருவாக்கி உள்ளீர்கள்.
தாங்கள் நியமித்த பதவிகள் எங்களுக்கு வேண்டாம். நாங்கள் என்றும் அதிமுக கட்சி உறுப்பினர்களாக இருந்து செயல்படுகிறோம். இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர். இதனால் அதிமுக தொண்டர்கள் குழப்பத்திலேயே உள்ளனர். கட்சி வளர்ச்சிக்காக இந்த எம்எல்ஏக்கள் பாடுபடுகிறார்களா, அல்லது தவெகவில் பேரம் பேசி எப்படியாவது அமைச்சர் பதவியியை வாங்கி உட்கார வேண்டும் என்ற ஆசையில் இப்படியெல்லாம் நடிக்கிறார்களா என்று ஒவ்வொரு தொண்டனும் பேசிக்கொள்கின்றனர்.
