தஞ்சாவூர், ஜூலை 1: தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு வருவாய் கோட்டாட்சியர் நித்யா தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தோழகிரிப்பட்டி கோவிந்தராஜ்: குறுவை சாகுபடி பொய்த்துவிட்டதால் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். சம்பா சாகுபடிக்கு முன்ஏற்பு மானியமாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கினால் தான் சாகுபடியை தொடங்க முடியும். 50 சதவீத மானிய விலையில் கூட்டுறவு சங்கங்களில் உரம் வழங்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களுக்கும் நெல் உலர்த்தும் எந்திரம் வாங்கி கொடுக்க வேண்டும்.
ஆம்பலாப்பட்டு தெற்கு தங்கவேல்: சம்பா சாகுபடி தொடங்க உள்ள நிலையில் ஜூலை முதல் வாரத்தில் மேட்டூர் அணையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜூலை முதல் வாரத்தில் தண்ணீர் திறந்தால் தான் கடைமடை பகுதிக்கு வந்து சேரும். சாகுபடி செய்யவும் ஏதுவாக இருக்கும். தண்ணீர் திறக்க காலதாமதம் ஆனால் விவசாயம் செய்ய முடியாது. அப்படி தாமதமானால் வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும். பெரம்பூர் அறிவழகன்: கூட்டுறவு சங்கங்களில் காம்ப்ளக்ஸ், பொட்டாஷ் உரங்கள் தட்டுப்பாடு நிலவுகிறது. வெள்ளாம்பெரம்பூர் துரை.ரமேஷ்: மேட்டூர் அணை திறக்கப்படாததால் குறுவை சாகுபடி பொய்த்து போனதை கருத்தில் கொண்டு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
உர விலை உயர்வு, எந்திர செலவின அதிகரிப்பு, தொழிலாளர்கள் ஊதிய உயர்வு போன்றவற்றை கருத்தில் கொண்டு தேர்தல் வாக்குறுதிப்படி நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,500 வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆறுகளில் குப்பைகள், கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும். அம்மையகரம் ஏ.கே.ஆர்.ரவிச்சந்தர்: மக்கள் பணத்தை தொட மாட்டோம், தொட்டவர்களை விடமாட்டோம். இதற்கு முன் தொட்டவர்களையும் விடமாட்டோம் என சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்தார். ஆனால், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 40 கிலோ நெல் மூட்டைக்கு ரூ.50 கட்டாய லஞ்சம் மற்றும் ஒரு மூட்டைக்கு 3 கிலோ எடை மோசடி தொடர்ந்து நடக்கிறது.
முதலமைச்சர், அமைச்சர், கலெக்டர், வருவாய் கோட்டாட்சியர் என அனைவரும் பணம் வாங்க மாட்டோம் என அறிவித்த பிறகு மூட்டைக்கு ரூ.50 வசூல் யாருக்கு செல்கிறது. தொழிலாளர்களுக்கு செல்கிறதா? அல்லது துறை உயர் அதிகாரிகளுக்கு செல்கிறதா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும். விவசாயிகள் பணத்தையும் தொடவிட மாட்டோம். தொட்டர்வர்களையும் விடமாட்டோம். இதற்கு முன் தொட்டவர்களையும் விடமாட்டோம் என்று முதல்-அமைச்சர் அறிவிக்க வேண்டும். ஒரத்தூர் பிரகலாதன்; வெண்ணாறு பிரிவு கச்சமங்கலம் தலைப்பு பிள்ளை வாய்க்கால் பாசனம் மூலம் ஒரத்தூர், நத்தமங்கலம், மேகளத்தூர், ஆற்காடு, உஞ்சிணி ஆகிய கிராமங்கள் பாசனம் பெறுகின்றன.
அப்பகுதிகளில் மழைகாலங்களில வயலில் உள்ள தண்ணீர் வடிவதற்கு வாய்ப்பு இல்லை. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அந்த பகுதிகளில் உள்ள நிலங்களை ஆய்வு செய்து, நில எடுப்பு செய்து அப்பகுதியில் வடிகால் வசதி செய்து தர வேண்டும் என 35 ஆண்டுகளாக புகார் மனு கொடுத்து வருகிறேன். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.
