மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே காதலுக்கு எதிர்ப்பால் காதல் ஜோடி ஆணவக்கொலை செய்யப்பட்டு சடலங்கள் தூக்கில் தொங்கவிடப்பட்டு உள்ளதாக காதலரின் பெற்றோர் புகார் கூறி உள்ளனர். காதலியின் வீடு சூறையாடப்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா புதுப்பாளையத்தை சேர்ந்த மாரிமுத்து மகன் பார்த்திபன் (19). கொத்தனார். இவரும், அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமியும் காதலித்து வந்தனர்.
சிறுமி பிளஸ் 2 பொது தேர்வில் தேர்ச்சி பெற்று கல்லூரி படிப்பை தொடர ஆயத்தமாகி வந்தார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இந்த காதல் விவகாரம் சிறுமியின் குடும்பத்துக்கு தெரியவந்தது. இதனால் பார்த்திபன் குடும்பத்தினருடன் சிறுமியின் குடும்பத்தினர் தகராறில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக பொறையாறு காவல் நிலையத்தில் மாரிமுத்து நேற்றுமுன்தினம் புகார் கொடுத்தார். அந்த புகாரில், ‘‘எங்களிடம் தகராறு செய்து ஜாதிபெயரை குறிப்பிட்டு மகன் பார்த்திபனை உருட்டை கட்டையால் தாக்கினர்.
இதனால் சிறுமியின் குடும்பத்தினர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து போலீசார் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் சாந்தங்குடியில் உள்ள குமரவேல் என்பவருக்கு சொந்தமான வயலில் உள்ள கீற்று கொட்டகை மாட்டு தொழுவத்தில் நேற்று அதிகாலை பார்த்திபனும், சிறுமியும் தூக்கில் சடலமாக தொங்கியதை வயலுக்கு அந்த வழியாக சென்ற சிலர் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக பொறையாறு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் காட்டுத்தீ போல் பரவியதால் புதுப்பாளையம், சாந்தங்குடியை சேர்ந்த கிராம மக்கள் மற்றும் காதல்ஜோடியின் குடும்பத்தினர், உறவினர்கள் திரண்டனர். காதல்ஜோடியை சிறுமியின் குடும்பத்தார்தான் ஆணவ கொலை செய்து தூக்கில் தொங்க விட்டதாக பார்த்திபனின் உறவினர்கள் போலீசாரிடம் குற்றம் சாட்டியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது இருதரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதுடன் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். பதற்றம் ஏற்படாமல் இருக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் போலீசார், 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே பார்த்திபனின் உறவினர்கள், சாந்தங்குடியில் உள்ள சிறுமியின் வீட்டுக்கு சென்று அங்கு வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த 2 டூவீலர்களை அடித்து நொறுக்கினர்.
மேலும் வீட்டு ஜன்னல் கண்ணாடியை அடித்து நொறுக்கியதுடன் காம்பவுன்ட் சுவரை இடித்து தள்ளினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்த ேபாலீசார் அங்கு விரைந்தனர். புதுப்பாளையம், சாந்தங்குடியில் தொடர்ந்து பதற்றம் நிலவியதால் இரு கிராமங்களிலும் மயிலாடுதுறை எஸ்பி (பொ) ஸ்டாலின் மேற்பார்வையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பொறையாறு போலீசார் 189 (2), 126 (2) பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பது, பொது சொத்தை சேதப்படுத்துவது, 296(பி) ஆபாச வார்த்தையால் திட்டுவது, 131, 351 பிஎன்எஸ் (3) உருட்டு கட்டையால் தாக்குவது, எஸ், எஸ்.டி (ஜாதிப்பெயரை சொல்லி திட்டுவது) உள்ளிட்ட பிரிவுகளின் வழக்கு பதிந்து சிறுமியின் தந்தை லட்சுமிகாந்தன், இவரது உறவினர்கள் சூர்யா, மணிமாறன், வசந்தன், விஜி ஆகிய 5 பேரை நேற்று கைது செய்தனர்.
அவர்கள் மீது கொலை வழக்கு பதியக்கோரி பார்த்திபனின் உறவினர்கள், விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் தரங்கம்பாடி மெயின் ரோட்டில் மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் கலைந்து செல்லாததால், போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேரை கைது செய்தனர்.
* போலீஸ் கூப்ட்டாங்கன்னு போனேன்; திரும்பி வந்தபோது மகனை காணோம்…தந்தை கண்ணீர்
பார்த்திபனின் தந்தை மாரிமுத்து செய்தியாளர்களிடம் கண்ணீருடன் அளித்த பேட்டி: நேற்று முன்தினம் இரவு 7 மணி இருக்கும். என் மகனை யாரோ அடித்துவிட்டதாக எனக்கு தகவல் வந்தது. நான் உடனே சென்று பார்த்தபோது அங்கு பெரும் கூட்டமாக இருந்தது. என் மகனிடம் விசாரித்தபோது, அவன் குளத்திற்கு சென்ற வேளையில் அங்கிருந்த 8க்கும் மேற்பட்டோர் சூழ்ந்து கொண்டு கொடூரமாக தாக்கியதாகக் கூறினான்.
இதையடுத்து, நாங்கள் உடனே பொறையாறு காவல் நிலையத்திற்கு சென்று அவர்கள் மீது புகார் அளித்தோம். புகார் அளித்த பின்னர், மகனை அரசு மருத்துவமனைக்கு கூட்டி சென்றோம். அங்கு பணியில் மருத்துவர்கள் யாரும் இல்லை. காலையில் வருமாறு கூறிவிட்டனர். இதனால் வேறு வழியின்றி நாங்கள் மீண்டும் வீட்டிற்கே திரும்ப வேண்டியதாயிற்று. வீட்டிற்கு வந்த பிறகும் என் மகனுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. அதிகாலை 1:30 மணி வரை அவன் என்னுடன்தான் அமர்ந்திருந்தான்.
எனக்கு நெஞ்சுவலியும், தலைவலியும் இருந்ததால் மாத்திரையை போட்டுக்கொண்டு படுத்துவிட்டேன். அதன்பின், 2:30 மணி அளவில் காவல் நிலையத்திலிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. எதிர்தரப்பை சேர்ந்தவர்களை கைது செய்ய வேண்டும், அதற்கு அவர்கள் வீட்டை அடையாளம் காட்ட வருமாறு போலீசார் கூறினர். நான் அங்கு சென்றபோது, சிறுமியின் வீட்டாரை சேர்ந்தவர்கள் எங்களை தாக்க முயன்றனர். போலீசார் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
நான் மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது என் மகனை காணவில்லை. அவனது செல்போனும் அணைக்கப்பட்டிருந்தது. பதற்றமடைந்த நான், உறவினர்களிடம் என் மகனை தேடுமாறு கூறினேன். காலை 6:45 மணி அளவில் என் அண்ணன் எனக்கு போன் செய்து, மகன் இறந்துவிட்டதாக கூறினார். அந்த அதிர்ச்சியில் எனக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டதால் என்னை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
என் மகனின் முகத்தை கூட நான் இன்னும் பார்க்கவில்லை. இருவரும் காதலித்து வந்த விஷயம் எனக்கு முன்னதாக தெரியாது. எனக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருந்தனர். மகள் சிறு வயதிலேயே இறந்துவிட்டாள். எனக்கு இருந்த ஒரே ஆதரவான மகனையும் இப்போது நான் பறிகொடுத்துவிட்டு நிற்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
* கடத்தி கொடூரமா கொன்னுட்டாங்க… உடலில் ரத்த கறையும், காயங்களும்…
பூம்புகார் சட்டமன்ற தொகுதி விசிக மாவட்ட செயலாளர் அன்பரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இருவரும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களது காதலுக்கு சிறுமியின் வீட்டார் தரப்பில் கடும் எதிர்ப்பு இருந்துள்ளது. சிறுமியின் தந்தை, தாய், சித்தப்பா உள்ளிட்டோர் பார்த்திபனை வழிமறித்து கொடூரமாக தாக்கியுள்ளனர்.
இது குறித்து பார்த்திபன் தரப்பில் பொறையாறு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரை விசாரிப்பதாக கூறி போலீசார், அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். அதிகாலை 2 மணி அளவில் பார்த்திபனை வீட்டில் காணவில்லை. எதிர் தரப்பினரை பிடிப்பதற்காக பார்த்திபனின் தந்தையை காவல்துறை அழைத்து சென்றிருந்த இடைப்பட்ட நேரத்தில், லட்சுமிகாந்தன் தரப்பை சேர்ந்தவர்கள் இருவரையும் கடத்தி சென்று கொடூரமாக தாக்கி படுகொலை செய்துவிட்டு, சாத்தான்குடியில் உள்ள ஒரு மாட்டுக்கொட்டகையில் தூக்கில் தொங்கவிட்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில்தான் பிரேத பரிசோதனை செய்யப்படும். ஆனால், திட்டமிட்டு திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். உடல்கள் மீட்கப்பட்ட கொட்டகை மற்றும் சடலங்கள் கொண்டு செல்லப்பட்ட வழியெங்கும் ரத்த கறைகளும், உடலில் காயங்களும் நிறைந்துள்ளன. இது அப்பட்டமான ஆணவப் படுகொலை. கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
