தண்டையார்பேட்டை: பீகார் மாநிலத்தை சேர்ந்த சாதுக்குமார் (24) மற்றும் அவரது நண்பர்கள் 5 பேர் வேலை தேடி ரயிலில் சென்னை சென்ட்ரலுக்கு வந்தனர். இவர்களுக்கு சென்னையில் கட்டிட வேலை செய்யும் நண்பர் வேலை வாங்கி தருவதாக கூறியதன்பேரில் வந்தனர். இதையடுத்து, தனது நண்பரை பார்ப்பதற்காக ஆட்டோ டிரைவரிடம் சவாரி பேசியுள்ளனர். அவர், சவாரி ஏற்றுவதுபோல் 5 பேரையும் இசிஆர் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.
இதனிடையே, சாதுக்குமாரின் நண்பர், ‘ரயிலை விட்டு இறங்கி வெகுநேரம் ஆகிறது, இன்னும் ஏன் வரவில்லை’ என போன் செய்து கேட்டுள்ளார். அதற்கு அவர்கள், ‘வழி தெரியவில்லை’ என கூறி, ஆட்டோ டிரைவரிடம் போனை கொடுத்துள்ளனர். மொழி தெரியாததால் தனியார் நிறுவன உரிமையாளரிடம் போனை கொடுத்துள்ளனர். நிறுவன உரிமையாளர், எங்கு வருகிறீர்கள் என கேட்டபோது, 5 பேரையும் கடத்திவிட்டோம். அவர்களை உங்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்றால் ரூ.7500 தர வேண்டும்’ என ஆட்டோ டிரைவர் மிரட்டியுள்ளார். சிறிது நேரத்தில் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. இதனால் சாதுக்குமாரின் நண்பர் நாண்டு மஞ்சி, பூக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் பூபதி தலைமையில் தனிப்படை அமைத்து கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில், பட்டினப்பாக்கத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் நெப்போலியன் என்பவர் 5 வாலிபர்களையும் கடத்தி சென்றது தெரியவந்தது. உடனே அவரது செல்போன் எண்ணையும், ஆட்டோ நம்பரையும் வைத்து நேற்று அவரை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், வடமாநிலத்தை சேர்ந்தவர்களை கடத்தி சென்று பணம் பறிக்கலாம் என நானும், என்னுடைய நண்பர்களும் நினைத்தோம். ஆனால் போலீசில் மாட்டிக்கொண்டோம் என கூறினார். மேலும் கூட்டாளிகளான மணி (40), நாராயண மூர்த்தி (38), மகேந்திரன் (39) ஆகியோர் உதவியுடன் 5 பேரையும் அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் தலா 8000 ரூபாய்க்கு விற்றுவிட்டோம் என தெரிவித்தனர். இதையடுத்து தனிப்படை போலீசார், அம்பத்தூர் சென்று 5 பேரையும் மீட்டு அவரது நண்பரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். பின்னர் 4 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இவர்களுக்கும், கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறி்த்தும் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் பூக்கடை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
