தியானம் எனும் அற்புத மலரை அருளும் அம்பிகை

253. த்யாந த்யாத்ரு த்யேய ரூபா.
254. தர்மா தர்ம விவர்ஜிதா
மேலே சொன்ன இரண்டு நாமங்களுக்கான பொருளை வேதாந்தத்தை தெரிந்து கொண்டால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். ஏனெனில், ஸ்ரீவித்யா தத்துவத்தினூடே வேதாந்தத்தையும் இந்த இரண்டு நாமங்களும் விவரிக்கின்றன.
வேதாந்தத்தில் அடிக்கடி உபயோகப்படுத்தப்படும் கலைச்சொல்லான திரிபுடி அல்லது திரிபுடி என்பதை நேரடியாகவே இந்த நாமங்கள் காண்பிக்கின்றன. மற்ற நாமங்களில் மறைமுகமாக இந்த திரிபுடி பற்றி பேசியிருக்கிறோம். இந்த நாமங்களானது நேரடியாகவே திரிபுடியைப் பற்றி பேசுகின்றது.
திரிபுடி என்றால் என்ன?
மூன்று விஷயங்கள். அதென்ன மூன்று விஷயங்கள் என்பதற்கு முன்னால் சில விஷயங்களை புரிந்து கொள்வோம்.
அது எந்த சம்பிரதாயமாக இருந்தாலும் சரிதான், இந்த உலகிற்கு காரணமான வஸ்து உண்டு என்று தெரிந்து கொள்கிறோம். அதற்கு பிரம்மம், சிவன், விஷ்ணு, அம்பாள்.. என்றெல்லாம் பின்னர் பெயர் கொடுக்கிறோம். இதற்கு பின்னர் இந்த உடலுக்கும் காரணமான ஒரு வஸ்து ஒன்று இருக்கிறது என்றும் புரிந்து கொள்கிறோம். உலக இயக்கத்திற்குக் காரணமான அந்த பிரமாண்ட வஸ்துவிற்கு பரமாத்மா என்றும், உடல் இயக்கத்திற்கு காரணமான சிறிய வஸ்துவிற்கு ஜீவாத்மா, உயிர் என்றெல்லாம் சொல்கிறோம்.
இந்த இரண்டும் வேறு வேறு என்றால் அது த்வைதம், அதற்குள் இது அடக்கம் என்றாகும்போது விசிஷ்டாத்வைதம், இன்னொன்றே அல்ல எனும்போதும், அது மட்டுமே இருக்கிறது என்று சொல்லும்போது அத்வைதம். இதெல்லாம் இருந்தாலும், இதற்குள்ளாக ஒரு தொடர்பை உண்டாக்க வேண்டுமென்று எல்லா சம்பிரதாயங்களும் ஒற்றுமையாக இருக்கின்றன. அந்த வஸ்துவோடு இவன் எப்படி தொடர்பு படுத்தப்படுகிறான் என்று ஒன்றுண்டு.அது என்னவெனில், அந்த வஸ்துவை இவன் அதிகமாக சிந்திக்கும்போது தொடர்புகொள்வான். அதிகமாக இந்த சரீரத்தோடு இவனை சிந்தித்துக் கொள்வான் எனில், சரீரத்தோடு இவனுக்குத் தொடர்பு இருக்கும்.
இப்போது இதில் ஒரு ரகசியம் உள்ளது. மற்ற விஷயங்களை அதிகமாக சிந்திக்காமல், அந்த பரமாத்ம வஸ்துவை குறித்து சிந்திக்க ஆரம்பித்து விட்டால் அதனோடு தொடர்பு கொண்டு விடுவான். இப்படி சிந்திக்கத் தொடங்கினால் அது அத்வைதம் கிடையாதா… த்வைதம் கிடையாதா… விசிஷ்டாத்வைதவம் கிடையாதா என்பதெல்லாம் வேறு விஷயம். நாம் இப்போது அடிப்படையாக, தினசரி வாழ்வை வைத்துக் கொண்டு பார்க்கிறோம். ஒருவரை பகவானை சிந்திக்க வைப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதே தவிர, நீ சிந்திப்பதற்கு ஒன்றுமே இல்லையப்பா என்று எடுத்தவுடன் கூற முடியாது. எதை நாம் சிந்தனைக்குள் அதிகமாக வைத்துக் கொண்டிருக்கிறோமோ அதோடு நாம் தொடர்பு படுத்தப்படுவோம்.
அப்போது இவன் பரமாத்ம வஸ்துவை சிந்திக்க சிந்திக்க ஞான சொரூபமாக இருக்கிறது. ஆனந்த சொரூபமாக இருக்கிறது. இவனிடமிருந்தும் ஞானம் வெளிப்படுகிறது. ஆனந்தமும் வெளிப்படுகிறது.
சாஸ்திர, சம்பிரதாயங்களுக்குள் வராதவர்களுக்கு இந்த சிந்தனை குறைவாக இருக்கும். மற்ற சிந்தனைகள் அதிகமாகவும் இருக்கலாம். சாஸ்திர, சம்பிரதாயங்கள், அத்யாத்ம சிந்தனைக்கு வந்துவிட்டவர்களுக்கு பரமாத்ம வஸ்து குறித்த சிந்தனை அதிகமாகவே இருக்கும். இன்னும் கேட்டால் அந்த பரமாத்ம வஸ்துவானது வாக்குக்கும், மனதுக்கும் அப்பாற்பட்டது என்பது வேறு விஷயம், ஆனால் நம்மிடம் இருப்பது மனம் என்கிற கருவி மட்டும்தான். சிந்தனை என்கிற வழி மட்டும்தான். அதனாலேயே சிந்திக்கிறோம். அது குருவோ, சத்சங்கமோ, பக்தியோ, ஸ்தோத்திரமோ ஞானமோ எது வேண்டுமானாலும் இருக்கலாம்.
இப்படி சிந்தனை அதிகரிக்கிறது அல்லவா… அப்படி அதிகரிக்கப்பதற்குத்தான் தியானம் என்று பெயர். ஆனால், நாம் தியானம் என்றாலே மனம் ஒருநிலைப்படுவதைத்தான் பொதுவாகச் சொல்கிறோம். அப்படி அல்ல. மனம் ஒருநிலைப்படுதல் என்பது தியானத் தினால் ஏற்படும் பலனே ஆகும்.
இதையெல்லாம் தாண்டி இந்த சத்தியத்தை, பரமாத்மாவை குறித்து அதிகமாக சிந்தனை செய் என்று சொன்னால், தானாக மனம் ஒருநிலைப்படும். அங்கு ஏதோ ஒன்று நடக்கும். அப்படி நடப்பதற்குத்தான் தியானம் என்று பெயர். So, meditation must happen. We cannot do meditation. We can only meditate. இப்படி தியானம் என்கிற நிலை கைகூடி வரும்போது தியானிப்பவன் என்கிற வஸ்துவும், அவன் தியானிக்கக்கூடிய வஸ்து என்பதும் தெரியும். தியானம் என்கிற நிகழ்வும் அவனுக்குத் தெரியும். இந்த மூன்றும் அவனுக்குத் தெரியும்.
இந்த மூன்றுக்கும் பெயர் என்னவென்று பார்ப்போமா.
தியானிக்கிறவனுக்குத்தான் த்யாத்ரு என்று பெயர்.
இந்த சாதகன் எந்த வஸ்துவை தியானிக்கிறானோ அதற்கு த்யேயம் என்று பெயர். இந்த தியானம் என்கிற நிகழ்வு இருக்கிறதல்லவா… அதற்கு தியானம் என்று பெயர். இந்த மூன்றும் வெளிப்படையாக மூன்றாகத் தெரிகின்றது. இந்த மூன்றும் வெவ்வேறாக தெரிவதை துவைத நிலை என்று எடுத்துக் கொள்ளலாம். போகப்போக தியானிப்பவன் என்கிற தனித்துவமானது கொஞ்சம் கொஞ்சமாக கரையத் தொடங்குகிறது. இவன் மெதுவாக தியான மயமாகி விடுகின்றான். தியானம், த்யேயம் பரமாத்ம விஷயமும்தான் இருக்கிறது. இதை விசிஷ்டாத்வைதம் என்று எடுத்துக் கொள்ளலாம்.
இதற்கும் அடுத்து இவன் வேறு, பரமாத்ம வஸ்து வேறு என்கிற duality எல்லாம் மொத்தமாக கரைந்து, தியானம் என்கிற அந்த நிகழ்தல் மட்டுமே இருக்கிறது. அந்த நிகழ்வும், ஞான மயமான ஆனந்த மயமான நிகழ்வு மட்டுமே உள்ளது. அங்கு சிந்திப்பவன், சிந்திக்கக் கூடிய பொருளும் தனித்தனியாக இல்லை. எல்லாமும் ஒன்றாகி என்னவென்றே சொல்ல முடியாத நிலை சித்திக்கின்றது. அந்த நிலையில் த்யானம், த்யாத்ரு, த்யேயம் மூன்றும், அதாவது தியானம், தியானிக்கப்படும் வஸ்து, தியானிக்கிறவன் மூன்றும் இல்லாத ஒரு நிலை சித்திக்கிறது. இந்த நிலைக்குத்தான் திரிபுடி ரஹிதம் என்று பெயர். ரஹிதம் என்றால் இல்லை என்று அர்த்தம்.
முதலில் த்ரிபுடி என்கிற வேதாந்த தத்துவத்தில் ஆரம்பிக்கின்றது. பிறகு, இந்த த்ரிபுடி ரஹிதம் என்கிற நிலையில் நம்மை நிறுத்துகிறது.
அதைத்தான் இந்த நாமமான த்யாந த்யாத்ரு த்யேய ரூபா… என்று வர்ணிக்கின்றது.
அம்பிகை எப்படி இருக்கிறாள். நாம் சொல்லக்கூடிய த்யானம். இந்த தியானம் என்கிற நிலையில் தன்னை உணரக்கூடிய த்யாத்ரூ என்கிற நிலை. எதை நோக்கி தியானிக்கிறானோ அந்த த்யேயம் என்கிற நிலை என்று மூன்றும் அம்பாளாகவே இருக்கிறாள். இந்த மூன்றும் வெவ்வேறு இல்லை என்று அர்த்தம். ஒரே வஸ்துவின் வெளிப்பாடு. அந்த ஒரே வஸ்துதான் லலிதா மஹாதிரிபுரசுந்தரியாக இருக்கிறாள்.
அந்த லலிதா மஹா திரிபுரசுந்தரிதான் த்யாத்ரூ என்கிற நிலையில் நம்முடைய ஜீவனாக இருக்கிறாள். த்யேயம் என்கிற நிலையில் தியானிக்கப்படும் வஸ்துவான பிரம்மமாகவும், ஜீவனையும் பிரம்மத்தையும் சேர்க்கக்கூடிய நிகழ்வான தியானமாகவும் இருக்கிறாள். வேதாந்தத்தால் அடையப்படும் உயர்ந்த வஸ்துவே இங்கு அம்பாளாக வெளிப்படுகின்றது.
இதற்கு அடுத்த நாமமானது தர்மா தர்ம விவர்ஜிதா என்பதாகும்.
இந்த இரண்டு நாமங்களையும் வைத்ததற்கு அடுத்தடுத்து ஏதேனும் காரணம் இருக்க வேண்டும். ஏனெனில், சென்ற நாமத்தில் திரிபுடி கிடையாது. மூன்று என்கிற விஷயம் கிடையாது. இருப்பது ஒன்றுதான் என்பதை நாம் அனுபவத்தில்தான் கொண்டு வர வேண்டுமே தவிர சாதாரண வார்த்தைகளினால் சொல்லிக் கொண்டேயிருப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை. அனுபவத்தில் கொண்டுவந்து விட்டால் இது அப்படியே வார்த்தைகளிலும் செயல்களிலும் பிரதிபலிக்கும். அனுபவம் இல்லாமல் ஒருவன் இதை அணுகினால் அது விபரீதமாகப் போகும். நான் தான் பிரம்மம்., நான் தோன்றியவற்றையெல்லாம் செய்வேன் என்று போவது எவ்வளவு விபரீதத்தைத் தரும்.
வசின்யாதி வாக் தேவதைகள் அங்குதான் ஒரு விஷயத்தைச் சொல்கிறார்கள்.
எந்த ஒன்று இந்த த்யான, த்யாத்ரூ, த்யேயத்தில் வெளிப்படுத்திக் கொள்கிறதோ அந்த வஸ்துவானது தர்மா தர்மங்களுக்கு மேம்பட்டதாக இருக்கிறது. நம்முடைய நிலையில், மனதினால் கட்டுண்டிருக்கும் நிலையில் தர்ம, அதர்மங்களுக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், த்யாந த்யாத்ரு த்யேய ரூபா… என்கிற நிலை எப்போது சித்திக்கிறதோ அப்போது த்ரிபுடி நிலையான தர்மத்தை அதர்மத்தை கடந்து சென்று விடுவோம். ஆனால், இப்போது அந்த நிலையை கொண்டு வந்துவிட்டு, எனக்கு தர்மம் கிடையாது. அதர்மம் கிடையாது. என்று சொல்லிக் கொண்டு திரியக்கூடாது.
எனவேதான், தியானம் என்கிற விஷயம் தானாக நிகழ்வதுபோல… தர்ம அதர்ம விஷயங்களை கடந்து இருக்கும் அம்பிகையின் நிலை தானாக நிகழ வேண்டும். அந்த நிலையையே சாதகனும் அடைகின்றான். அதைத்தான் தர்மா தர்ம விவர்ஜிதா என்று இந்த நாமம் வர்ணிக்கின்றது. அம்பிகை எப்போதுமே தர்மா தர்ம விவர்ஜிதா… என்கிற நிலையில் இருக்கிறாள். அவளால் மட்டுமே இது தர்மம் இது அதர்மம் என்றும் சொல்ல முடியும். நம்மால் சொல்வது என்பது இயலாத காரியமாகும். அவளே தர்ம சொரூபமாக இருக்கிறாள் என்பதும், அதையும் தாண்டியும் இருக்கிறாள் என்பதும் இதன் மையமாகும். இதுவே தர்மா தர்ம விவர்ஜிதா என்பதன் பொருளாகும்.
இதற்கான கோயிலாக திருவையாறு ஐயாறப்பர் ஆலயத்தைச் சொல்லலாம்.
ஏன் சொல்கிறோமெனில், திருவையாறில் முக்கியமான ஒரு விஷயம் உண்டு. சுவாமி ஐயாறப்பரின் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி இருப்பார். கொஞ்சம் வித்தியாசமாக இருப்பார். ஹரி யோக தட்சிணாமூர்த்தி என்று பெயரில் அருள்கிறார். இங்குள்ள தட்சிணாமூர்த்தியின் இன்னொரு விசேஷம், அவருக்கு ஜப்யேசர் என்கிற இன்னொரு பெயர் இருப்பதுதான்.
அதென்ன ஜப்யேசர். இந்த ஜப்யேசருக்கு முன்னால் ஒரு மண்டபம் உள்ளது. அந்த மண்டபத்தில் உட்கார்ந்து மந்திர ஜபம் செய்தோமெனில், அந்த மந்திரம் சித்திக்கும். இதுதான் அந்த மண்டபத்தின் முக்கியத்துவம்.
இப்போது மூல ஸ்தானத்தில் பஞ்ச நதீஸ்வரர் இருக்கிறார். சுயம்பு மூர்த்தி. ஆத்ம சொரூபமானது. இந்த மண்டபத்தில் அமர்ந்து நாம் ஜபம் செய்கிறோம். இப்போது நமக்கும் மூலவருக்கும் இடையே ஜப்யேசர் என்கிற தட்சிணாமூர்த்தி இருக்கிறார். இதை அப்படியே இந்த நாமாவோடு சேர்த்துப் பார்க்க வேண்டும்.
இந்த மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்யும் நாம் த்யாத்ரூ, உள்ளே மூலவராக இருக்கக் கூடிய ஆத்ம சொரூபமானவர் த்யேயம், இந்த இரண்டையும் இணைக்கக்கூடிய தட்சிணாமூர்த்திதான் தியான சொரூபம். இப்போது த்ரிபுடியை காண்பித்து திரிபுடி இல்லாத நிலையை காண்பிப்பதற்குத்தான் அந்த மண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது. எங்கு த்ரிபுடி இல்லாம போகிறதோ அதுதான் மந்திரம் சித்தியாகும் இடமேயாகும்.
இப்படி த்ரிபுடி இல்லாமல் போகும்போது அவன் தர்ம அதர்மங்களுக்கு அப்பாற்பட்டு போகின்றான். அம்பாள் தர்ம அதர்மங்களை கடந்திருக்கிறாள் என்றும் பார்த்தோம். தர்மா தர்ம விவர்ஜிதாவாக இருக்கிறாள் என்று பார்த்தோம்.
யார் இப்படி தர்ம அதர்மங்களை கடந்து இருக்கிறாளோ . அவளால்தான் இது தர்மம், இது அதர்மம் என்று சொல்லவும் முடியும் என்று பார்த்தோம். அந்த தர்மத்தை நிலைநிறுத்தவும் முடியும். வளர்க்கவும் முடியும். இவை அனைத்து மாக இருக்கும் அம்பிகை திருவையாறில் தர்மசம்வர்த்தினியாக இருக்கிறாள்.
இப்படி திரிபுடியை கடந்தும், தர்மா தர்மங்களை கடந்தும் இருப்பதை இந்த நாமங்கள் வர்ணிக்கின்றன. இதை அப்படியே இந்தக் கோயிலில் உள்ள மூர்த்தங்களும் வெளிப்படையாக சுட்டிக்காண்பிக்கின்றன. எனவே, இந்த நாமங்களுக்கு திருவையாறு தர்மசம்வர்த்தினி சமேத ஐயாறப்பர் ஆலயத்தையே சொல்லலாம்.
(சக்தி சுழலும்…)

Related Stories: