திருப்போரூர், ஜூன் 30: தமிழகத்தில் கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற அதிமுக ஆட்சியின்போது நியோமேக்ஸ் என்ற நிறுவனம் மாநிலம் முழுவதும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் சுமார் ரூ.8 ஆயிரம் கோடி மோசடி செய்தது. பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து அதை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து லாபத்தை 3 மடங்காக கொடுப்பதாக அந்த நிறுவனம் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. மேலும் இதை நம்பி பலரும் அதில் முதலீடு செய்தனர். இதில் ஒரு கட்டத்திற்கு பிறகு அந்த நிறுவனம் மூடப்பட்டது. இந்த மோசடியில் தொடர்புடைய பலரும் கைது செய்யப்பட்ட வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நியோமேக்ஸ் நிறுவனத்தின் பங்குதாரராக இருந்தவர் சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த சார்லஸ் (56). இவர் கடந்த 27ம் தேதி காலை 11 மணியளவில் தனது காரில் ஓஎம்ஆர் சாலையில் உள்ள நாவலூர் பகுதிக்கு சென்றார். அப்போது அவரது கார் ஓட்டுனர் பெருங்குடியைச் சேர்ந்த ஷியாம் விக்னேஷ் (30) என்பவர் காரை ஓட்டிச் சென்றுள்ளார். பின்னர், நாவலூரில் சாலையோரம் காரை நிறுத்திவிட்டு ஷியாமிடம் எதிரே உள்ள ஷாப்பிங் மாலின் உள்ளே செயல்படும் எலைட் மதுபானக் கடையில் மதுபாட்டில்கள் வாங்கி வருமாறு தனது ஓட்டுனரிடம் கூறியதை அடுத்து ஷியாம் காரில் இருந்து இறங்கி சாலையின் எதிர் திசையில் இருந்த ஷாப்பிங் மாலுக்கு சென்றார். அதனை தொடர்ந்து 15 நிமிடங்கள் கழித்து வந்து பார்த்தபோது காரையும் அதில் இருந்த சார்லசையும் காணவில்லை. மேலும் அவரது செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டபோது அது சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதனால் பயந்து போன ஷியாம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு நடந்ததை கூறினார். இதையடுத்து தாழம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஷியாமிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது வேறொரு காரில் 4 பேர் வந்ததும் அதில் இருந்த 3 பேர் இறங்கி சார்லசிடம் பேச்சு கொடுத்து அவரது காரில் ஏறி செல்வதும் பதிவாகி இருந்தது. இதனால் சார்லசை காருடன் கடத்திச் சென்றவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். அவர்களது கார் சென்ற சாலையில் இருந்த சுங்கச்சாவடி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து ஆய்வில் கடத்தல் கும்பல் வெவ்வேறு கார்களில் மாறிமாறி செல்வது தெரிய வந்தது.
இந்நிலையில் சிவகங்கை அருகே 3 பேர் கொண்ட கும்பலை தாழம்பூர் தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் நியோமேக்ஸ் மோசடியில் சிக்கிய பணத்தை மீட்பதில் ஏற்பட்ட தகராறில் கடத்தல் சம்பவம் நடைபெற்றது முதற்கட்டமாக தெரிய வந்தது. மேலும் கடத்தப்பட்ட சார்லசை மர்ம நபர்கள் வேறொரு காரில் ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்றதும் தெரிய வந்துள்ளது.
சொத்துகள் ஏலம்
நியோமேக்ஸ் சொத்து மோசடி வழக்கில் நீதிமன்ற உத்தரவின்படி அந்த நிறுவனத்திற்கு சொந்தமான 10 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகளை ஏலம் விட்டு பணத்தை முதலீட்டார்களுக்கு வழங்கும் பணி தொடங்கி உள்ளது. இதனால் சொத்துகளை இழக்க விரும்பாத மற்ற பங்குதாரர்கள் இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏல விற்பனையை தடுக்க கடத்தல்?
நியோமேக்ஸ் சொத்து மோசடி வழக்கில் சம்பாதித்த பணத்தில் 216 துணை நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்றும், 3 ரிசார்ட்கள், 18 ஓட்டல்கள், 10 பள்ளிகள் என பல்வேறு நபர்களின் பெயரில் நடத்தப்பட்டு வருகின்றன என்றும் கூறப்படுகிறது. இந்த சொத்துகளை இழக்க விரும்பாத மற்ற பங்குதாரர்கள் நீதிமன்ற உத்தரவின்படி நடைபெறும் இணைய தள ஏல விற்பனையை தடுக்கும் நோக்கில் இந்த கடத்தல் சம்பவத்தை நடத்தி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
