தாம்பரம், ஜூலை 2: செங்கல்பட்டு மாவட்டம், மணம்பத்தியைச் சேர்ந்த ஜாபா சிங் துரை (55), இவர் கேளம்பாக்கத்தில் உள்ள கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றி வருகிறார். இவர் குரோம்பேட்டை ரயில் நிலைய பேருந்து நிலையத்தில் நின்றிருந்தபோது, அங்கு வந்த 16 வயது சிறுவன், அவரது 13 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக சிறுவனை மடக்கிப் பிடித்து, அடித்து குரோம்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
காயமடைந்த சிறுவனை போலீசார் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஜாபா சிங் துரை அளித்த புகாரின் பேரில், குரோம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவ சிகிச்சை முடிந்ததும், சிறுவனை சிறார் நீதி வாரியத்தின் முன்பு ஆஜர்படுத்தி, சீர்திருத்த இல்லத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
