நாகப்பட்டினம், ஜூன்30: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்டகுழு சார்பில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்றது. நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்டக்குழு சார்பில், பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயர்வை ஒன்றிய அரசு கட்டுப்படுத்த வேண்டும். கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக 44 தொழிலாளர் சட்டங்களை 4 தொகுப்பு சட்டங்களாக மாற்றிடும் தொழிலாளர் விரோத நடவடிக்கையை கைவிட வேண்டும். அனைத்து விவசாயிகளின் விவசாய கடன்களை முழுமையாக மாநில அரசு ரத்து செய்ய வேண்டும்.
மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதி அளிப்பு திட்டத்தை மாற்றி கொண்டு வரப்பட்டுள்ள புதிய சட்டத்தை கைவிட வேண்டும். கோவில்மனை இடங்களில் குடியிருப்போருக்கு பட்டா, மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள வலியுறுத்தி மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சிவகுரு.பாண்டியன் தலைமை வகித்தார். நாகப்பட்டினம் எம்பி செல்வராஜ் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
ஆர்ப்பாட்டத்திற்கு மாநில கட்டுப்பாட்டுகுழு உறுப்பினர் பாண்டியன், மாவட்ட துணைச் செயலாளர் நாகராஜன், மாவட்டப் பொருளாளர் பாபுஜி, விவசாய சங்க மாவட்ட செயலாளர் சரபோஜி, விவசாய தொழில் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
