தெளிந்த நீரோட்டத்துடன் பாய்ந்த வடவாறு மாசடைந்து கழிவு நீர் கால்வாயாக மாறி வரும் அவலம்

 

தஞ்சாவூர், ஜூன் 29: தெளிந்த நீரோட்டத்துடன் பாய்ந்த வடவாறு மாசடைந்து கழிவு நீர் கால்வாயாக மாறி வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். காவிரி டெல்டா பகுதி ஆறுகளால் சூழ்ந்தது. தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகள் மற்றும் 30-க்கும் மேற்பட்ட கிளை ஆறுகளும் பிரிந்து சென்று பாசன வசதியை அளித்து வருகிறது. இந்த ஆற்றுப்பாசனம் மூலம் டெல்டா மாவட்டங்களில் மட்டும் 12.50 லட்சம் ஏக்கர் வரை பாசன வசதி பெற்று வருகிறது.

அந்த வகையில், தஞ்சையை அடுத்த தென் பெரம்பூரில் உள்ள வெண்ணாறு, வெட்டாறு தலைப்பில் இருந்து பிரியும் வடவாறு, தஞ்சை மாநகரம் வழியாக பாய்ந்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் எளவனூர் வரை சுமார் 64 கி.மீ. தூரம் செல்கிறது. இந்த ஆற்றின் மூலம் சாலியமங்கலம், அம்மாப்பேட்டை, மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல பகுதிகளில் 72 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும், பறவைகளின் சொர்க்க பூமியாக விளங்கும் வடுவூர் ஏரிக்கும், இந்த ஆறு முக்கிய நீராதாரமாக திகழ்கிறது. ஒருகாலத்தில் தெளிந்த நீரோட்டத்துடன் பாய்ந்த வடவாறு, இன்று கழிவு நீர் கால்வாயாக மாறி வருவது வேதனைக்குரியதாக உள்ளது.
குறிப்பாக, தஞ்சை மாநகரின் ராஜாகோரி சுடுகாடு முதல் கரந்தை, கீழவாசல் பகுதிகள் வரை ஏராளமான இடங்களில் வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பிற கட்டிடங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நேரடியாக ஆற்றில் கலக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

காவிரியில் தண்ணீர் வராத காலங்களிலும் கரந்தை பகுதியில் வடவாற்றில் நீர் ஓடிக் கொண்டே இருப்பதற்கு காரணம் சாக்கடை கழிவு நீரே என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். கீழவாசல் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அனைத்தும் வடவாற்றில் கலப்பதால் ஆற்றின் இயற்கை தன்மை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கரந்தை, கீழவாசல் மற்றும் வடவாறு கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் சுவாசக் கோளாறு, தோல் நோய் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு ஆளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விவசாய விளைபொருட்களின் தரத்திலும் பாதிப்பு ஏற்படக்கூடிய நிலை உள்ளது. இந்நிலை தொடர்ந்து நீடித்தால் எதிர்காலத்தில் குடிநீர் பற்றாக்குறை மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு மேலும் மோசமடையக் கூடும் என்று கூறுகின்றனர்.

காவிரி டெல்டா பகுதி, விவசாயமும், குடிநீர் வளமும், சுற்றுச்சூழல் அமைப்பும் ஆறுகள், கால்வாய்கள் மற்றும் ஏரிகளை சார்ந்தே இயங்கி வருகின்றன. ஆனால் கழிவுநீர் கலப்பு, ஆக்கிரமிப்புகள், தூர்வாராதது மற்றும் பராமரிப் பின்மை காரணமாக இந்த நீர்நிலைகள் ஒன்றன்பின் ஒன்றாக காணாமல் போகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. வடவாறு மற்றும் கல்லணைக் கால்வாயில் கழிவுநீர் கலப்பதை முழுமையாக தடுக்க சாக்கடை நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல், சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகளை துண்டித்தல், ஆறுகளை தூர்வாருதல், ஆகாயத்தாமரைகளை அகற்றுதல் மற்றும் நீரின் தரத்தை தொடர்ந்து கண்காணித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

டெல்டாவின் உயிர்நாடிகளாக விளங்கும் வடவாறும், கல்லணை கால்வாயும் பாதுகாக்கப் பட வேண்டியது காலத்தின் கட்டாயமாக மாறியுள்ளது. இல்லையெனில் எதிர்கால தலைமுறையினருக்கு தூய்மையான நீராதாரங்களை வழங்க முடியாத சூழ்நிலை உருவாகும் என்று சுற்றுசூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.

 

Related Stories: