சென்னை: அரசு கல்லூரி உதவிப் பேராசிரியர் தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழும் புகார்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை : கிட்டத்தட்ட 25 வருட இடைவெளிக்குப் பிறகு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சுமார் 2,708 உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வில் மொத்தம் 42,064 தேர்வர்கள் பங்கேற்றனர். தமிழ் மொழிக்கான தேர்வு தவிர, 150 மதிப்பெண்களுக்கான பாடம் சார்ந்த புறநிலை வினாக்கள் பகுதி மற்றும் 50 மதிப்பெண்களுக்கான விளக்கக் கட்டுரைத் தாள் தேர்வு நடைபெற்றது. உதவிப் பேராசிரியர் எழுத்துத் தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 25.6.2026 அன்று அறிவித்ததைத் தொடர்ந்து, விளக்கக் கட்டுரைகளின் மதிப்பீட்டில் பெரும் அளவிலான முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
வருங்கால மாணவச் செல்வங்களுக்கு பாடம் கற்பித்து வழிகாட்டியாக இருக்கக்கூடிய உதவிப் பேராசிரியர்கள் தேர்வில், இது போன்ற முறைகேடுகள் நடைபெற்றால், கற்றல், கற்பித்தல் முறையில் பெரும் பாதிப்புகள் ஏற்படுவதுடன், அரசு கல்லூரிகளில் சேர்ந்து அதிக அளவு பயனடையும் ஏழை, எளிய நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த இளைய தலைமுறையினரின் எதிர்காலமும், நாட்டின் முன்னேற்றமும் கேள்விக்குறியாக மாறிவிடும். குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்குச் சாதகமாக வெளியிடப்பட்ட தேர்வு முடிவினை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மேலும், இது குறித்து சுதந்திரமான முழு விசாரணை நடத்தப்பட்டு, தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கவும், விசாரணை முடியும் வரை அனைத்து ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
