×

திருவனந்தபுரம் மாநகராட்சியில் மார்க்சிஸ்ட், பாஜ கவுன்சிலர்கள் மோதல்: மேயர், துணை மேயர், 2 முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜ, கம்யூனிஸ்ட் கவுன்சிலர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மேயர் வி.வி. ராஜேஷ், துணை மேயர் ஆஷா நாத் மற்றும் 2 சிபிஎம் முன்னாள் அமைச்சர்கள் உள்பட 12 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருவனந்தபுரம் மாநகராட்சியில் துணை மேயர் ஆஷா நாத் உள்பட 20 பாஜ கவுன்சிலர்கள் பல்வேறு தெய்வங்களின் பெயரில் பதவிப்பிரமாணம் செய்ததை தொடர்ந்து அவர்களது பதவியேற்பை கேரள உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில் கடந்த 24ம் தேதி உயர்நீதிமன்ற உத்தரவு வந்த ஒரு சில மணிநேரத்திலேயே துணை மேயர் ஆஷா நாத் உள்பட19 பாஜ கவுன்சிலர்கள் மேயர் வி.வி. ராஜேஷ் முன்னிலையில் மீண்டும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். இவர்கள் அனைவரும் தெய்வத்தின் பெயரால் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ஆனால் மற்ற கவுன்சிலர்களுக்கு தெரிவிக்காமல் பதவிப்பிரமாணம் நடத்தியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை மேயர் வி.வி. ராஜேஷ் வழக்கம்போல மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தார். அப்போது அங்கு திரண்டு வந்த மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் மேயரை அலுவலகத்திற்குள் நுழைய விடாமல் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். உடனடியாக பாஜ கவுன்சிலர்கள் அங்கு விரைந்து வந்தனர். அப்போது இரு தரப்பினருக்கு இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதில் மேயர் வி.வி. ராஜேஷ், துணை மேயர் ஆஷா நாத் உள்பட பல கவுன்சிலர்கள் கீழே விழுந்தனர்.இந்த சம்பவத்தில் மேயர், துணை மேயர், ஒரு பெண் போலீஸ் உள்பட 20 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பாஜ மற்றும் மார்க்சிஸ்ட் தரப்பில் திருவனந்தபுரம் மியூசியம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து போலீசார் 4 வழக்குகள் பதிவு செய்தனர். பாஜ அளித்த புகாரின் பேரில் சிபிஎம் முன்னாள் அமைச்சர்களான கடகம்பள்ளி சுரேந்திரன் மற்றும் சிவன்குட்டி ஆகியோர் மீதும், சிபிஎம் அளித்த புகாரில் மேயர் வி.வி. ராஜேஷ், துணை மேயர் ஆஷா நாத் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர்கள் உள்பட மொத்தம் 12 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

* நம்பிக்கை இல்லா தீர்மானம்
திருவனந்தபுரம் மாநகராட்சியில் மொத்தம் 101 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் பாஜவுக்கு 50 உறுப்பினர்களும், இடதுசாரி கூட்டணிக்கு 29 உறுப்பினர்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 20 உறுப்பினர்களும், 2 சுயேட்சைகளும் உள்ளனர். ஒரு சுயேட்சையின் ஆதரவுடன் தான் பாஜ திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றியது.

இந்நிலையில் காங்கிரஸ் ஆதரவுடன் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர இடதுசாரி கூட்டணி ஆலோசித்து வருகிறது. பாஜவை தோற்கடிக்க 2 சுயேட்சைகளின் ஆதரவை பெறவும் இடதுசாரி கூட்டணி தீவிர முயற்சி எடுத்து வருகிறது. நம்பிக்கை இல்லா தீர்மானத்தை சந்திக்கத் தயார் என்று மேயர் ராஜேஷ் தெரிவித்தார்.

Tags : Marxist ,BJP ,Thiruvananthapuram Corporation ,Mayor ,Deputy ,Thiruvananthapuram ,V.V. Rajesh ,Deputy Mayor ,Asha Nath ,CPM ,Communist ,Thiruvananthapuram… ,
× RELATED தோழி இறந்ததால் மனமுடைந்த பள்ளி மாணவி தற்கொலை