ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்ட புகாருக்காக எ.வ.வேலு, 10 அதிகாரிகள் வீடுகளில் சோதனை: அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: முன்னாள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் 10 அதிகாரிகளின் தொடர்புடைய சென்னை, திருவண்ணாமலை, கரூர், திண்டுக்கல் கோவை, திருப்பூர் என 20 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இதில், ரூ.40 லட்சம் ரொக்கம், நெடுஞ்சாலை துறை தொடர்பான ஆவணங்கள், டிஜிட்டல் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த சோதனைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அறப்போர் இயக்கம் சார்பில் புகார் ஒன்று அளிக்கப்பட்டது. அதில், மாநில நெடுஞ்சாலைத்துறையின் பல்வேறு பிரிவுகளில் உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு கடந்த 2022 மார்ச் மாதம் பல கோடி ரூபாய் பணம் சட்டவிரோதமாக வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ‘சிஆர்ஐடிபி’ திட்டத்தின் கீழ் ரூ.5 ஆயிரம் கோடி நிதி சாலைகள் அகலப்படுத்துதல் மற்றும் விரிவாக்க பணிக்காக நெடுஞ்சாலை துறைக்கு ஒதுக்கப்படுகிறது.

அதில் குறிப்பிட்ட நிதியை ஒரு குறிப்பிட்ட ஒப்பந்த நிறுவனமான திருப்பூர் பகுதியை தலைமையிடமாக இயங்கி வரும் ‘சங்கரானந்த் இன்ப்ரா’ நிறுவனத்திற்கு தமிழக நெடுஞ்சாலை துறை சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் கரூர் பகுதியில் சாலைகளை அகலப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் பயணத்தரத்தை மேம்படுத்துதல், குறுகிய சாலைகளை மேற்கொள்ளுதல், வடிகால் பணிகளை செய்து வருகிறது.

அதன்படி கடந்த 2022ம் ஆண்டு மார்ச் 7ம் தேதி அன்று இந்த ஒப்பந்த நிறுவனத்திற்கு மாநில டுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.7 கோடியும், மார்ச் 25 மற்றும் 28ம் தேதிகளில் எந்த பணிகளும் மேற்கொள்ளப்படாத நிலையில் கூடுதலாக ரூ.3.23 கோடி நிதி இந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சம்பந்தப்பட்ட நாட்களில் அதிகாரிகள் போடத சாலைகளான தொட்டாக்குறிச்சி- கரூர் ரூ.76,62,942, மன்மங்கலம் – நன்னியூர் சாலை ரூ.98,80,661, நெரூர்- தளவாபாளையம் ரூ.26,80,562, கரூர் ஈசனத்தம்- கூம்பூர் விரியம்பட்டி பகுதிகளில் ரூ.1,21,03,385 என மொத்தம் 3 கோடியே 23 லட்சத்து 27 ஆயிரத்து 550 ரூபாய் அந்த ஒப்பந்த நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக வழங்கப்பட்டுள்ளது.

இதுபோல் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் சாலைகள் மற்றும் பராமரிப்பு பணிகள் நடக்காமல கணக்கு காட்டி மக்கள் பணத்தை மோசடி செய்துள்ளதாக புகார் அளித்தார். இந்தப் புகாரில் ஏற்கனவே திமுக ஆட்சிக்காலத்தில் கரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 3 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்திருந்தனர். தற்போது அந்த புகாரின் படி விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

அதன்படி டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்திய போது, கடந்த 2022ம் ஆண்டு வாரணாசி- கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் பகுதியில் உள்ள தொட்டாக்குறிச்சி- கரூர் பகுதியில் புகாரில் கூறப்பட்ட கடந்த 2022ம் ஆண்டு மார்ச் 25 மற்றும் 28ம் ஆகிய நாட்களில் மன்மங்கலம் – நன்னியூர் சாலை, நெரூர்- தளவாபாளையம், கரூர் ஈசனத்தம்- கூம்பூர் விரியம்பட்டி பகுதிகளில் எந்த சாலைகளும் போடப்படவில்லை என்று விசாரணையில் தெரியவந்தது.

போடாத சாலைகள் பணிகளுக்கு ஒப்பந்த நிறுவனமான சங்கரானந்த் இன்ப்ரா நிறுவனத்திற்கு ரூ.3.23 கோடி நிதி வழங்கப்பட்டது உறுதியானது. மேலும், மார்ச் 2022ம் ஆண்டு பணம் செலுத்தப்பட்ட சாலைகளுக்கு தரச்சான்றும் வழங்கப்படவில்லை என்றும் தெரியவந்தது. வேலை செய்யாமல் பணம் பெற்றது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் முன்னாள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, கரூர் கட்டுமான மற்றும் பராமரிப்புத்துறையில் உதவி கோட்ட பொறியாளராக பணியாற்றி தற்போது தலைமை பொறியாளர் அலுவலகத்தில் கோட்ட பொறியாளராக பணியாற்றி வரும் கண்ணன், கரூர் மாவட்ட இளநிலை பொறியாளராக பணியாற்றி தற்போது சென்னை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வரும் பூபாலன், தமிழ்நாடு சாலைத்துறை திட்டத்தின் கோட்ட கண்காணிப்பாளர் பெரியசாமி,

திண்டுக்கல் மாவட்டம் பழனி சண்முகபுரத்தில் வசித்து வரும் ஓய்வு பெற்ற முன்னாள் கரூர் மாவட்ட கோட்ட பொறியாளர் சத்தியபாமா, தற்போது கோவை மாவட்டம் துணை கணக்காணிப்பு பொறியாளராக பணியாற்றி வரும் நிதிலன், திட்டமிடல் வடிவமைப்பு மற்றும் ஆய்வு தலைமை பொறியாளர் அலுவலகத்தில் உதவி கோட்ட பொறியாளராக பணியாற்றி வரும் ரபீக் முகமது, நெடுஞ்சாலை துறையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணியாற்றி வரும் தீபிகா,

திருச்சி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணியாற்றி வரும் கார்த்திக், சென்னை நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர் அலுவலகத்தில் கோட்ட கணக்காளராக பணியாற்றி வரும் சத்யா, கரூர் பகுதியில் உள்ள ஒப்பந்த நிறுவனமாக சங்கரானந்த் இன்ப்ரா நிறுவனம் மீது 120 பி, 420, 409, 468, 471 மற்றும் ஐபிசி 109 மற்றும் ஊழல் தடுப்பு சட்டம் 7(சி), 13(2), 13(1), (ஏ) 12 ஆகிய பிரிவுகளின் கீழ் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதில் தற்போது ஓய்வு பெற்ற அதிகாரி சத்யபாமா தவிர மற்ற 9 அதிகாரிகள் தற்போது உயர் பதவியில் உள்ளனர். அதைதொடர்ந்து முன்னாள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீடு, திருவண்ணமாலையில் உள்ள வீடு, அலுவலகங்கள் மற்றும் தலைமை பொறியாளர் கண்ணன் வீடு, அலுவலகம், பூபாலன் சிங் வீடு மற்றும் கரூர் சங்காரபுரத்தில் உள்ள ஒப்பந்ததாரர் சங்கர் நிறுவனம், வீடுகளில் சோதனை நடந்தது.

குறிப்பாக தமிழகம் முழுவதும் சென்னையில் 4 இடங்களிலும், திருவண்ணாமலையில் 4 இடங்கள், திண்டுக்கல்லில் 2 இடங்கள், கோவையில் 2 இடங்கள், கரூர் பகுதியில் 7 இடங்கள், திருப்பூர் பகுதியில் 1 இடம் என மொத்தம் 20 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையிலான குழுவினர் ஒரே நேரத்தில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது முன்னாள் அமைச்சர் வீடு, தலைமை பொறியாளர், உதவி பொறியாளர் மற்றும் ஒப்பந்த நிறுவனம் என 20 இடங்களில் இருந்து, கணக்கில் காட்டப்படாத ரொக்கம் ரூ.40 லட்சம், மதிப்புமிக்க ஆவணங்கள், டிஜிட்டல் ஆதாரங்கள், நெடுஞ்சாலைத்துறை தொடர்பான ஆவணங்கள் மற்றும் குற்றத்தை நிரூபிக்கும் பிற ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு, அலுவலகங்களில் எந்த பணமும் கைப்பற்றப் படவில்லை. லஞ்ச ஒழிப்புத்துறையின் இந்த சோதனைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை, ஆளும்கட்சியின் இதுபோன்ற நடவடிக்கை களுக்கு அஞ்சும் இயக்கம் அல்ல திமுக என்றும் தெரிவித்துள்ளார்.

* சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தள்ளுபடி
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, கடந்த 2006-11 ஆட்சி காலத்தில் உணவுத்துறை அமைச்சராக பணியாற்றியபோது, வருமானத்துக்கு அதிமாக ரூ.26.30 லட்சம் சொத்து சேர்த்ததாக, லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் கடந்த 2012ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, 2015ம் ஆண்டு திருவண்ணாமலை கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறையினர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.

ஆனால், சுப்ரீம் கோர்ட்டிலும் இந்த வழக்கு 2018ம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் சட்டமன்ற பொது தேர்தலின்போது, திருவண்ணாமலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த நேரத்தில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீடு, கல்வி நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

ஆனாலும், எவ்வித ஆவணங்களும் பறிமுதல் செய்யப்படவில்லை. அதேபோல், கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம், அமைச்சராக இருந்தபோதே எ.வ.வேலு வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் தொடர்ந்து 4 நாட்கள் இடைவிடாமல் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். ஆனாலும், பணம் மற்றும் ஆவணங்கள் உள்ளிட்ட எவையும் பறிமுதல் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

* எ.வ.வேலுவுடன் எம்பி ஆ.ராசா சந்திப்பு
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்பான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இந்த சோதனையின் இடையே சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள எ.வ.வேலு வீட்டின் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் குவிந்து இருந்தனர். இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அப்போது எ.வ.வேலுவின் வழக்கறிஞரான சரவணன் அவரது வீட்டிற்கு வந்து சிறிது நேரம் காத்திருந்தார்.

போலீசார் அனுமதி அளித்த பிறகு அவர் உள்ளே சென்று சோதனை தொடர்பாக எ.வ.வேலுவிடம் விசாரித்தார். அதேபோல், நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசாவும், சோதனை நடந்து கொண்டிருந்த போது எ.வ.வேலு வீட்டிற்கு வந்து காத்திருந்தார். பின்னர் வெகு நேரம் காத்திருந்த நிலையில் போலீசார் அனுமதித்த பின் உள்ளே சென்று எ.வ.வேலுவிடம் சோதனை தொடர்பாக விசாரித்துவிட்டு வெளியே வந்தார்.

* சென்னை, திருவண்ணாமலை, திண்டுக்கல், கோவை, கரூர், திருப்பூர் நகரங்களில் மொத்தம் 20 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையிலான குழுவினர் ஒரே நேரத்தில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

* லஞ்ச ஒழிப்புத்துறையின் இந்த சோதனைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறியுள்ளார்.

Related Stories: