கராகஸ்: வெனிசுலா தலைநகர் கராகஸில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கங்களால் ஏற்பட்ட பேரழிவுகள் மற்றும் உயிரிழப்புகளுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த வருத்தமும், வேதனையும் தெரிவித்து உள்ளார். இது தொடர்பான எக்ஸ் பதிவில் இந்த கடும் நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தனது இரங்கலையும் தெரிவித்து கொண்டுள்ளார். இந்த பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது, வெனிசுலாவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கங்களால் நிகழ்ந்துள்ள பேரழிவைக் கண்டு ஆழ்ந்த துயரம் கொள்கிறேன்.
இந்திய மக்களின் சார்பில், வெனிசுலா அரசாசுக்கும் மக்களுக்கும், குறிப்பாகத் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திப்பதோடு, இக்கடினமான சூழலில் பாதிக்கப்பட்ட அனைவருடனும் நாங்கள் உறுதுணையாக நிற்கிறோம். பாதிக்கப்பட்டுள்ள வெனிசுலாவிற்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது என்று கூறி இருக்கிறார்.
மேலும் நிலநடுக்கத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் அனைவரும் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திப்பதாகக் கூறியுள்ளார். முன்னதாக வெனிசுலாவில் ஏற்பட்ட அடுத்தடுத்த சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் ஆரம்பகட்ட அதிகாரப்பூர்வ தகவலின்படி சுமார் 40 பேர் வரை பலியாகினர் மற்றும் 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தலைநகர் கராகஸ் (Caracas) உட்பட பல பகுதிகளில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து மிகப்பெரிய அளவிலான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
