அதிகளவில் குடிநீரை பயன்படுத்தக்கூடிய 1 லட்சம் கட்டிடங்களை கண்டறிந்து ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்த முடிவு: குடிநீர் வாரியம் தகவல்

சென்னை: சென்னையில் அதிக அளவில் குடிநீரை பயன்படுத்தக்கூடிய ஒரு லட்சம் கட்டிடங்களை கண்டறிந்து, அவற்றில் அதிநவீன ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை மக்களின் குடிநீர் தேவையை சீரமைக்கவும், தண்ணீர் வீணாவதை துல்லியமாக கண்காணிக்கவும் கொண்டு வரப்பட்டுள்ளதுதான் இந்த ஸ்மார்ட் மீட்டர் திட்டம். இந்த திட்டத்துக்காக தமிழக அரசு 273.60 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளது.

இந்த அதிநவீன ஸ்மார்ட் குடிநீர் மீட்டர்களை பொருத்தி, அவற்றை முழுமையாக இயக்குவதற்காக ஜே.டபிள்யூ.ஐ.எல். இன்ப்ரோ லிமிடெட் என்ற ஒப்பந்த நிறுவனம் தனியாக நியமிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம்தான் இப்போது அதிரடியாக களமிறங்கி உள்ளது.
முன்னதாக, சென்னை மக்கள் எந்தெந்த நேரங்களில் குடிநீரை அதிகமாக பயன்படுத்துகிறார்கள், அவர்களின் இப்போதைய நீரின் பயன்பாட்டு அளவு என்ன, மற்றும் அதற்கான கட்டணங்களை எப்படி வசூலிப்பது என்பது குறித்த விரிவான ஆய்வுகள் தொடங்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல, இந்த ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்தும் உண்மையான கட்டுமான பணிகளை தொடங்குவதற்கு முன்னதாக, பொதுமக்களின் தரவுகளை சேகரித்து ஆய்வு செய்யும் பணிகளையும் இந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் மத்தியில் இந்த புதிய தொழில்நுட்பம் குறித்து, யாரும் பயமோ, குழப்பமோ அடையாமல் இருக்க, திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பாகவே மக்களிடையே விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டத்தையும் செயல்படுத்த இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பொதுமக்கள் குடிநீரை பயன்படுத்தும் நேரத்தை மிகத் துல்லியமாக கண்காணிப்பதற்கும், ஒட்டுமொத்த நகரின் நீர் பயன்பாட்டை சீரமைத்து சமமாக விநியோகிப்பதற்கும் சென்னை குடிநீர் வாரியம் இப்படியொரு முயற்சியை மேற்கொண்டுள்ளது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணிகள் இந்த திட்டத்தின் கீழ், சென்னை நகரின் அனைத்து மண்டலங்களிலும் உள்ள சுமார் 2,500 சதுர அடி மற்றும் அதற்கு மேற்பட்ட பரப்பளவு கொண்ட பெரிய கட்டிடங்களும் முழுமையாகச் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த மீட்டர்களில் ஐ.ஓ.டி எனப்படும் நவீன ஆன்லைன் டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பத்தின் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால், இனிமேல் குடிநீர் வாரிய ஊழியர்கள் நுகர்வோரின் வீடுகளுக்கோ அல்லது கட்டிடங்களுக்கோ நேரில் வந்து மீட்டரைப் பார்த்து ரீடிங் எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. ஒவ்வொரு மாதமும் தானியங்கி முறையில் இந்த மீட்டர்கள் மூலமாகவே நீர் நுகர்வு அளவு கணக்கிடப்பட்டு, கம்ப்யூட்டர் மூலமாக துல்லியமான கட்டண விவரங்கள் உருவாக்கப்பட்டு பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும்.

பெரிய பெரிய கட்டிடங்கள் இந்த பிரமாண்ட திட்டத்தின் முதல் கட்டமாக, சென்னை முழுவதும் மொத்தம் 73 ஆயிரத்து 608 கட்டிடங்கள் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்துவதற்காக துல்லியமாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த முதல்கட்ட லிஸ்ட்டில் 47,043 தனிப்பட்ட பெரிய குடியிருப்பு கட்டிடங்களும், 26,886 வர்த்தக கட்டிடங்கள் அதாவது வணிக வளாகம், கடைகள், அலுவலகங்கள் போன்றவை அனைத்தும் உள்ளடக்கமாகும். இந்த முதற்கட்டப் பணிகள் முடிந்ததுமே, மற்ற கட்டிடங்களுக்கும் இந்த திட்டம் படிப்படியாக விரிவுபடுத்தப்படும். இதன் மூலம் சென்னை மாநகரில் குடிநீர் திருட்டு, நீர் வீணாதல் போன்ற சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, அனைவருக்கும் முறையான குடிநீர் விநியோகம் சாத்தியமாகும் என சென்னை குடிநீர் வாரியம் நம்புகிறது.

இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘‘சென்னையில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவதற்காக சுமார் ஒரு லட்சம் கட்டிடங்களில் ஸ்மார்ட் தண்ணீர் மீட்டர்கள் விரைவில் பொருத்தப்படும். இதன் மூலம் ஒவ்வொரு கட்டிடமும் எவ்வளவு தண்ணீர் பயன்படுத்துகிறது என்பதை நேரடியாக கண்காணிக்க முடியும். அதிகமாக தண்ணீர் பயன்படுத்தும் இடங்களில் இந்த மீட்டர்கள் பொருத்தப்படும். கடைகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவற்றில் இவை முதலில் பொருத்தப்படும். 2,500 சதுர அடிக்கு மேல் உள்ள பெரிய வீடுகளிலும் இந்த மீட்டர்கள் பொருத்தப்படும்.

இந்த திட்டம் 2024-25 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. ஆனால் விரிவான ஆய்வு, நல்ல தரமான மீட்டர்களுக்கு காத்திருப்பு, டெண்டர் வேலைகள் போன்ற காரணங்களால் சற்று தாமதமானது. தற்போது சென்னை நகரில் 17 லட்சம் பேருக்கு மெட்ரோ வாட்டர் வழங்கப்படுகிறது. இதுவரை 22,000 கட்டிடங்களில் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டு விட்டன. இதில் எவ்வளவு தண்ணீர் பயன்படுத்தினோம் என்பதை சரியாக கணக்கிட்டு, அதற்கு மட்டுமே மாதாந்திர கட்டணம் வரும்.

இந்த திட்டம் ஹைப்ரிட் அனுயிட்டி மாடல் முறையில் செயல்படுத்தப்படும். இதில் அரசாங்கம் ஒரு பங்கு பணம் கொடுக்கும். ஒப்பந்ததாரர் மீட்டர்களை பொருத்துவார், ரீடிங் எடுப்பார், 15 ஆண்டுகள் பராமரிப்பார். இது சென்னை நகர கூட்டாண்மை திட்டத்தின் முக்கிய பகுதியாகும். தண்ணீரை திறமையாக பயன்படுத்துவதும், வீணாகும் தண்ணீரை குறைப்பதும் இதன் நோக்கம்,’’ என்றனர்.

Related Stories: