ஆதாரம் இல்லாமல் முதல்வர் பேசுவதாக கூறி திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு: சட்டப்பேரவையை ஷூட்டிங் ஸ்பாட்டாக மாற்றிவிட்டார்கள் என உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: ஆதாரம் இல்லாமல் பேசுவதாக கூறி திமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து நேற்று வெளிநடப்பு செய்தனர். அப்போது, தவெக உறுப்பினர்கள் கூச்சல் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. சட்டப்பேரவையில் நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்வர் விஜய் பதில் அளித்து பேசியதாவது: தமிழகத்தில் 9 மாதம் சட்டம் – ஒழுங்கு டிஜிபி இல்லை. இப்போது தான் அதற்கு விடை கண்டுபிடித்தோம். போதைப்பொருள் தடுப்புக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.

டாஸ்மாக் விற்பனையில் பார்ட்டி பண்ட் என்ற பெயரில் பணம் பெறப்பட்டுள்ளது. (இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச எழுந்தார். ஆனால் அவரை பேச சபாநாயகர் அனுமதிக்கவில்லை. அனுமதி கேட்டு திமுக எம்.எல்.ஏக்கள் எழுந்து நின்று குரல் எழுப்பினர். பதிலுக்கு தவெக அமைச்சர்கள் உள்பட அனைத்து எம்.எல்.ஏக்களும் எழுந்து நின்று குரல் எழுப்பினர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது)

சபாநாயகர் ஜே.சி.டிபிரபாகர்: முதல்வர் பேசி முடித்ததும் எதிர்க்கட்சி தலைவர் பேச அவகாசம் தருகிறேன். (இதனை ஏற்றுக்கொள்ளாமல் திமுக மற்றும் தவெக உறுப்பினர்கள் எழுந்து நின்று குரல் எழுப்பியதுடன், ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி குரல் எழுப்பி வார்த்தைகளால் மோதிக்கொண்டனர்)

அவை முன்னவர் செங்கோட்டையன்: முதல்வர் பேசி முடித்த பின் எதிர்க்கட்சி தலைவர் பேச அனுமதிக்கப்படும், அதனை பின்பற்றுங்கள்.

அமைச்சர் ராஜ்மோகன்: திமுக உறுப்பினர்கள் அவையின் கண்ணியத்தை காத்து அவையின் மரபை கடைபிடிக்க வேண்டும். (அப்போது திமுக உறுப்பினர்கள் எதிர்க்கட்சி தலைவர் பேசும்போது ஆளும் அமைச்சர்கள் பதிலளித்து அவரது பேச்சுக்கு குறிக்கீடு செய்தனர். அதேபோன்று முதல்வரின் குற்றச்சாட்டுக்கு எதிர்க்கட்சி தலைவர் பேச அனுமதி வழங்க வேண்டும்)

அமைச்சர் ராஜ்மோகன்: சோபா மாடல் அரசு, குதிரை பேரம் என எதிர்க்கட்சி தலைவர் நேற்று குற்றம் சாட்டினார். நாங்கள் கேட்டுக்கொண்டு அமைதியாக இருந்தோம். முதல்வர் பேசிய பிறகு எதிர்க்கட்சி தலைவர் பேச வேண்டும்.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: பேரவையின் முதல் நாளில் திமுகவினர் அவை மரபு, பாரம்பரியம் குறித்து எங்களுக்கு பாடம் எடுத்தனர். நேற்று எதிர்க்கட்சி தலைவர் எங்கள் மீது எவ்வளவோ குற்றச்சாட்டை கூறினார். அதற்கு ஒன்று இரண்டுக்கும் மட்டும் பதில் அளித்தோம். மற்ற நேரத்தில் அமைதியாக இருந்தோம். திமுக உறுப்பினர்கள் எங்களை பார்த்து முதல்வர் ஏன் பதிலளிக்காமல் அமைதியாக இருக்கிறார் என குற்றம் சாட்டினர்.

இன்று முதல்வர் பேசும்போது பார்ட்டி பண்டு என கூறினார். எந்த கட்சி என கூறவில்லை. முதல்வர் பேசிய பிறகு பதில் அளிக்கலாம். (அப்போது திமுக உறுப்பினர் ஆஸ்டின் முன்வரிசைக்கு வந்து சபாநாயகர் மற்றும் தவெக உறுப்பினர்களை பார்த்து பேசினார். அப்போது சபாநாயகர் உங்கள் இருக்கையில் அமருங்கள் என கூறினார். முதல்வர் பேசும் வரை அமைதியாக இருந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்) இதனையடுத்து எதிர்க்கட்சி தலைவரை பேச சபாநாயகர் அனுமதி அளித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்: நேற்றைய தினம் நான் பேசியபோது சில அமைச்சர்கள் குறுக்கீடு செய்தனர். அதற்கு சபாநாயகர் அனுமதி அளித்தீர்கள். இப்போது முதல்வர் பேசும்போது பார்ட்டி பண்டு என கூறியுள்ளார். தைரியம் இருந்தால் ஆதாரத்துடன் கூறுங்கள். நேற்று அவை நடவடிக்கை முடிந்தது என சபாநாயகர் கூறினார். நாங்களும் அவையில் இருந்து வீட்டுக்கு சென்றுவிட்டோம். பின்னர் டிவியை பார்த்தால், ஒரு அமைச்சர் சட்டப்பேரவையில் பேசிக்கொண்டிருந்தார். இது என்ன நடைமுறை என தெரியவில்லை. முதல்வர் பேசும்போது ஆதாரத்தோடு பேசினால் நாங்கள் அதனை ஏற்றுக்கொள்கிறோம்.

முதல்வர் விஜய்: டாஸ்மாக் உள்பட பல துறைகளிலும் முறைகேடு நடந்துள்ளது. நாங்கள் மக்கள் பணத்தை தொடமாட்டோம். தொட விடமாட்டோம். தொட்டவர்களையும் விட மாட்டோம் என கூறினார்.
(முதல்வரின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் மீண்டும் எழுந்து நின்று, உதயநிதி பேச அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.)

முதல்வர் விஜய்: இப்போது திமுகவினர் புதிதாக ஒன்றை கூறுகின்றனர். அவர்கள் தயவில் தான் இந்த ஆட்சி நடப்பதாக கூறுகின்றனர். மக்கள் தயவில் தான் இந்த ஆட்சி நடைபெறுகின்றது. மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் சுயேச்சையாக முடிவு எடுத்துதான் ஆதரவு கொடுத்தோம் என்கிறார்கள். (இப்படி முதல்வர் விஜய் ஆவேசமாக பேசினார். அப்போதும், முதல்வர் ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டுகளை கூறி வருவதாக கூறி, திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

அப்போது தவெக, திமுக உறுப்பினர்களை பார்த்து நக்கல் நையாண்டி செய்தனர். மேலும், முதல்வர் விஜய் ஆவேசமாக பேசும்போது தவெக உறுப்பினர்கள் மேசையை தட்டியதுடன் ஆக்ரோஷமாக குரல் எழுப்பி, கூச்சல் போட்டனர். ஒரு சில தவெக எம்எல்ஏக்கள் விசில் அடித்தனர். இதுபோன்ற சம்பவம் பேரவையில் இதுவரை கண்டிராத நடவடிக்கையாக இருந்தது). ஸ்கிரிப்டை எடுத்து வந்து…: வெளிநடப்புக்கு பின் சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.

முதல்வர் வழக்கம்போல பிரசாரங்களில் பேசுவதுபோலச் சினிமா பாணியில் தயார் செய்யப்பட்ட டயலாக்குகளைப் பேசிக் கொண்டிருந்தார். உண்மைக்கு மாறான தகவல்களை அவையில் பதிய வைக்கும் வேலையை ஆரம்பித்தார். உடனே நானும் சட்டமன்ற உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்து, பாயிண்ட் ஆப் ஆர்டரில் பேச அனுமதி கேட்டேன். ஆதாரம் இல்லாமல் பேசக்கூடாது என்று சொல்வதற்கு தான் பாயிண்ட் ஆப் ஆர்டர். ஆனால், சபாநாயகர் எங்களை அனுமதிக்கவில்லை.

எதிர்கட்சித் தலைவரான நான் நேற்று பேசும்போது பல அமைச்சர்கள் குறுக்கிட்டுப் பேசினார்கள். முதல்வரிடம் கேள்வி கேட்டால் முதல்வர் எந்த பதிலும் சொல்லவில்லை. ஆனால், அமைச்சர்கள் பலமுறை சொன்னதையே திரும்பத் திரும்பப் பேசினார்கள். சபாநாயகர் அவை நேரம் முடிந்துவிட்டது என்று சொன்ன பிறகு, நாங்கள் வீட்டுக்குச் சென்ற பிறகும் ஒரு அமைச்சர் பதில் அளித்துக் கொண்டிருந்தார். ஆனால், இன்று முதல்வர் உண்மைக்கு புறம்பான ஒன்றைச் சொல்லும் போது அதை மறுத்து, எந்த ஆதாரத்துடன் பேசுகிறீர்கள்; ஆதாரம் இருந்தால் கொடுங்கள் என்று கூறினேன். எந்த ஆதாரமும் கொடுக்கவில்லை.

ஆனால், சபாநாயகர் முதல்வர் தொடர்ந்து பேச அனுமதித்தார். முதலமைச்சர் இன்று ஒரு ஸ்கிரிப்ட் எடுத்து வந்திருக்கிறார். அந்த ஸ்கிரிப்ட்டை அவர் பேசி முடிக்கும் வரை நான் யாருக்கும் பதில் சொல்லமாட்டேன் என்ற தொனியில், அந்த சீனின் மொத்த டயலாக்கையும் பேசி முடிக்கும் வரை யாரும் கட் சொல்லக்கூடாது என்ற மனநிலையில், ஷூட்டிங் போனால் எப்படி இருப்பாரோ அதேபோல் சட்டமன்றத்தை ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டாக மாற்றிக் காட்டியுள்ளார் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

* மு.க.ஸ்டாலின் பாணியில் முதல்வர் விஜய் ‘சைகை’
இன்றைய பதிலுரையை படித்து முடித்த பிறகு முதல்வர் விஜய் சபாநாயகரின் அனுமதியை பெற்று எதிர்க்கட்சியினர் இருக்கும் போது ஒன்று செய்ய நினைத்தேன். தற்போது அவர்கள் வெளிநடப்பு செய்து விட்டனர். அதனை இப்போது செய்து கொள்ளலாமா என சபாநாயகரிடம் கேட்டார். சபாநாயகரும், அதற்கு அனுமதி அளித்தார். அப்போது, முதல்வர் விஜய் FINISH (முடித்து விட்டேன்) என்பது போல சைகையை காண்பித்தார்.

இதனை தவெக உறுப்பினர்கள் கரகோஷம் எழுப்பி கொண்டாடினர். ஆனால் எதிர்முனையில் இருந்து அதிமுக, பாமக போன்ற கட்சிகள் ரசிக்கவில்லை. அதிகாரிகளும் முதல்வரின் இந்த நடவடிக்கையை கண்டு அதிர்ச்சியடைந்ததுடன் தலையில் கை வைத்துக்கொண்டதை காண முடிந்தது.

இது, தேர்தலின்போது திமுக கூட்டணி கட்சிகளுக்கு சீட் ஒதுக்கி கொடுத்து, எல்லா பிரச்னையும் முடிந்து விட்டதா என நிருபர்கள் அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கேட்டபோது, இதுபோன்று சைகை செய்து, எல்லாம் முடிந்து விட்டது என்பது போல் கூறுவார். இது சட்டப்பேரவைக்கு வெளியில் நடந்த சம்பவம். ஆனால், சட்டப்பேரவைக்குள் முதல்வர் விஜய் அதேபோன்று செய்தது, எதையோ சாதித்து விட்டது போன்ற ஒரு தோற்றத்தையே அது வெளிப்படுத்தியது.

* 42 நிமிடங்கள் பேசிய முதல்வர்
சட்டப்பேரவை கூட்டம் நேற்று சரியாக 9.30 மணிக்கு தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும், மறைந்த சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் அ.சின்னசாமி, வீ.எஸ்.காளிமுத்து ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து முதல்வர் விஜய் காலை 9.39 மணிக்கு தனது பதிலுரையை தொடங்கினார். தொடர்ந்து 10.38 மணிக்கு அவர் பேச்சை நிறைவு செய்தார். ஒட்டு மொத்தமாக 41 நிமிடங்கள் 42 வினாடிகள் அவர் பேசினார். இதையடுத்து, சட்டப்பேரவை மீண்டும் கூடும் நாள் தெரிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்தார்.

* விசில் அடித்து பேரவை மாண்பை கெடுத்த தவெக உறுப்பினர்கள்
தமிழக சட்டமன்ற பேரவை வரலாற்றில் காமராஜர், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்கள் முதல்வராக இருந்தபோது ஆளுநர் உரை மீதான முதல்வரின் பதிலுரை என்பது முக்கியத்துவம் வாய்ந்தவையாக பார்க்கப்படும். இதில் அவை மாண்பு மற்றும் மரபு எந்தவித கண்ணிய குறைவும் இல்லாமல் காக்கப்படும்.

ஆனால் நேற்றைய தினம் முதல்வர் விஜய் பதில் அளித்து பேசும்போது, முதலில் எழுதி வைத்ததை பார்த்து படித்தார். பின்னர், வழக்கமான அவர் மேடை மற்றும் சினிமாவில் கத்தி பஞ்ச் டயலாக் பேசுவது போன்று ஆக்ரோஷமாக பேசினார். அப்போது சட்டப்பேரவையில் இருந்த தவெக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆர்வக்கோளாறாக திரையரங்கில் பஞ்ச் டயலாக் பேசினால் எப்படி விசில் அடித்து கூச்சல் போடுவார்களோ அதுபோல பேரவையிலும் மேஜையை தட்டி, கத்தி, விசில் அடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதனால் கடந்த 70 ஆண்டுக்கும் மேலாக நடைபெற்ற பேரவைக்கு நடவடிக்கையில் இருந்து திசை மாறி, சட்டப்பேரவைக்கு என இருந்த ஒரு மாண்பு முற்றிலுமாக சிதைக்கப்பட்டதாக மூத்த அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: