உண்மைக்கு புறம்பான கருத்துகளை கூறுவதா; நெல்லைக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா வந்தால் கருப்புக்கொடி காட்டுவோம்

 

கேடிசிநகர், ஜூன் 23: அதிமுக அழிந்து கொண்டிருக்கிறது என உண்மைக்கு புறம்பான கருத்துகளை கூறி வரும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா நெல்லைக்கு வந்தால் கருப்பு கொடி காட்டுவோம் என அக்கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 53 ஆண்டுகள் கடந்து அதிமுக இயக்கம் வெற்றி நடை போடுகிறது. ஏழை எளிய மக்களுக்காக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் ஆரம்பிக்கப்பட்ட மாபெரும் மக்கள் இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.

தமிழ்நாட்டை கடந்த 31 ஆண்டுகள் ஆட்சி செய்தும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் கட்டிக்காத்த மாபெரும் வலிமையான இயக்கம் அதிமுகவாகும். அவரது வழிகாட்டுதலின் படி பொதுச்செயலாளர் எடப்பாடியார் தலைமையில் வெற்றி நடைபோடுகின்ற மாபெரும் இயக்கமாகவும் உள்ளது. நீங்கள் (த.வெ.க.) வந்து ஆட்சி அமைத்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. அதற்குள் அதிமுக அழிந்து கொண்டு உள்ளது என்று பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறுகிறார். பதவி ஆசைக்காகவும், பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடனும், விசுவாசியாக இல்லாமல், வியாபாரியாக இருந்த முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் சிலர் தவெகவில் இணைந்துள்ளார்களே தவிர, அ.தி.மு.க. உண்மை தொண்டர்கள் யாரும் விலைபோகவும் இல்லை. விலை போகவும் மாட்டர்கள்.

அமைச்சர் ஆதவ் அர்ஜூனா இதுபோன்ற உண்மைக்கு புறம்பான செய்திகளை கூறக்கூடாது. அதை வன்மையாக கண்டிக்கின்றோம். மேலும் இதே போன்று தாங்கள் நாகரீகமற்று கூறிவந்தால், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடியாரிடம் அனுமதி பெற்று எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஆதவ் அர்ஜூனா நெல்லை மாவட்ட வருகையின் போது கருப்பு கொடி போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் அதிமுக மாநில அமைப்புச் செயலாளர் சுதா பரமசிவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

Related Stories: