கால்நடைகளுக்கு சிகிச்சை பெறுவதில் சிக்கல்: நிரந்தர மருத்துவர் இல்லாத எட்டயபுரம் மருத்துவமனை

 

எட்டயபுரம் ஜூன் 23: எட்டயபுரம் கால்நடை மருத்துவமனைக்கு நிரந்தர மருத்துவர் நியமிக்க வேண்டுமென கால்நடை வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர். எட்டயபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மானாவாரி விவசாயமும், அதற்கு அடுத்தப்படியாக ஆடு, மாடு வளர்ப்பும் முக்கிய தொழிலாக விளங்குகிறது. தென் இந்திய அளவில் கறிக்கு பெயர் போன எட்டயபுரம் பொட்டுக்குட்டி வகை ஆடுகளும், மானாவாரி நிலங்களில் கிடை அமர்த்தும் செம்மறி ஆடுகளும் ஆயிரக்கணக்கில் எட்டயபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வளர்க்கப்படுகிறது. அதேபோல் எட்டயபுரம் குளத்துள்வாய்பட்டி, கடலையூர், சுரைக்காய்பட்டி பிதப்புரம், புதூர், ராமனூத்து உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் 2 ஆயிரம் கறவை மாடுகள் உள்ளன.

எட்டயபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் ஆடு, மாடு வளர்க்கும் விவசாயிகள் எட்டயபுரம் கால்நடை மருத்துவமனையில் தான் தங்கள் கால்நடைகளுக்கு சிகிச்சை பெறுகின்றனர். மேலும் வாரந்தோறும் 5 ஆயிரம் ஆடுகள் வரை விற்பனை நடைபெறக்கூடிய தென் தமிழகத்தில் உள்ள முக்கிய ஆட்டுச்சந்தையில் எட்டயபுரம் முதன்மையானதாக விளங்குகிறது. இவ்வாறு ஆடு, மாடு, கோழி, நாய் என கால்நடை வளர்ப்பில் முன்னணியில் உள்ள எட்டயபுரத்தில் உள்ள கால்நடை மருத்துவமனையில் கடந்த 5 மாதங்களாக நிரந்தர மருத்துவர் இல்லாத நிலை நீடிக்கிறது. கோவில்பட்டி அருகேயுள்ள துறையூர் கால்நடை மருத்துவர் வாரத்திற்கு மூன்று நாள் திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமை நாட்களில் எட்டயபுரம் கால்நடை மருத்துவமனைக்கு கூடுதல் பொறுப்பாக வந்து செல்கிறார்.

இந்நிலையில் ஆடு, மாடுகளுக்கு திடீரென ஏற்படும் வயிற்றுப்போக்கு, காய்ச்சல், சினைமாடுகள் மற்றும் இளங்கன்றுகளுக்கு ஏற்படும் நோய்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை பார்க்க முடியாமல் கால்நடை வளர்ப்போர் சிரமப்படுகின்றனர். இதனால் அவசர சிகிச்சைக்கு தனியார் மருத்துவரிடம் ஆயிரக்கணக்கில் பணம் செலவு செய்து வைத்தியம் பார்க்கும் நிலை உள்ளது. எனவே கால்நடை வளர்ப்பை முக்கிய தொழிலாக கொண்டுள்ள எட்டயபுரம் பகுதியில் செயல்படும் கால்நடை மருத்துவமனைக்கு உடனடியாக நிரந்தர கால்நடை மருத்துவர் நியமிக்க வேண்டும் என கால்நடை வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆவின் மருத்துவர் வருகையும் நிறுத்தம்
எட்டயபுரம், கடலையூர், குளத்துள்வாய்பட்டி ஆகிய 3 இடங்களில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் செயல்படுகிறது. இந்த சங்கத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த சங்கங்களில் சுமார் 800 கறவை மாடுகள் மூலம் பால் வழங்கப்படுகிறது. இந்த சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும் பால், ஆவின் பால் சேமிப்பு நிலையத்திற்கு. அனுப்பப்படுகிறது. இதனால் சங்கத்தில் பதிவு பெற்ற கறவை மாடுகளுக்கு வைத்தியம் பார்ப்பதற்கு ஆவின் நிறுவனம் மூலம் தனியாக கால்நடை மருத்துவர் நியமிக்கப்பட்டு இருந்தார். தற்போது இந்த மருத்துவரும் வருவதில்லை.இதனால் கறவை மாடுகள் வளர்ப்போர் அவசரத்திற்கு கூட சிகிச்சை பெற முடியாமல் சிரமப்படுகின்றனர்.

‘‘உரிய பதில் கிடைப்பதில்லை”
எட்டயபுரம் கால்நடை மருத்துவமனையில் கால்நடை ஆய்வாளர் பணியில் உள்ளார். அவரிடம் சென்று மருத்துவர் எப்போது வருவார் என கால்நடை வளர்ப்போர் கேட்டால் உரிய பதில் கிடைப்பதில்லை என்று கால்நடை வளர்ப்போர் வேதனையோடு தெரிவிக்கின்றனர். இதுகுறித்து எட்டயபுரம் பால் உற்பத்தியாளர்கள் சங்க முன்னாள் துணை தலைவர் எட்டப்பன் கூறியதாவது: எட்டயபுரம் பகுதியில் ஆடு, மாடு வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது. ஆனால் அதனை பாதுகாக்கும் வகையில் மருத்துவ சேவை இல்லை. கால்நடை மருத்துவமனையில் கடந்த 5 மாதமாக மருத்துவர் இல்லை. ஆவின் மூலம் நியமிக்கப்பட்ட மருத்துவரும் நிறுத்தப்பட்டு உள்ளார். இதனால் எட்டயபுரம் பகுதியில் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சை பெறுவதில் சிரமம் உள்ளது. எனவே எட்டயபுரம் கால்நடை மருத்துவமனைக்கு உடனடியாக மருத்துவர் நியமிக்க வேண்டும். நிறுத்தப்பட்ட ஆவின் மருத்துவரையும் நியமிக்க வேண்டும், என்றார்.

Related Stories: