ஏரல், ஜூன் 23: சுப்பிரமணியபுரத்தில் இருந்து சாயர்புரம் செல்லும் மெயின் ரோட்டில் 7 இடங்களில் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பால் தண்ணீர் வீணாகி வருகிறது. சம்பந்தப்பட்ட குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், இந்த குழாய் உடைப்புகளை சீரமைத்திட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏரல் அருகேயுள்ள மங்கலக்குறிச்சி தாமிரபரணி ஆற்றில் இருந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் உறைகிணறு அமைக்கப்பட்டு 90 கிராம கூட்டுக்குடிநீர் திட்டத்தில் சாலையோரத்தில் பதிக்கப்பட்ட குழாய்கள் மூலம் பஞ்சாயத்துகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இதே வழித்திடத்தில் பதிக்கப்பட்ட குழாய்கள் மூலம் சாயர்புரம் கூட்டுக்குடிநீர் திட்டம் மற்றும் தூத்துக்குடியில் ஒரு சில பகுதிகளுக்கும் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில் மங்கலக்குறிச்சியில் இருந்து சாயர்புரம் வரை உள்ள சாலையோரத்தில் அவ்வப்போது குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு வருவதால் இந்த சாலைகள் பல இடங்களில் குண்டும், குழியுமாக மாறியுள்ளன. இவ்வழித்தடத்தில் பதிக்கப்பட்ட குடிநீர் குழாயில் சாயர்புரம் போப் கல்லூரி வாசல், தூய மேரி மகளிர் மேல்நிலைப் பள்ளி வாசல், போப் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானம் அருகில் உள்ள கழிவுநீர் ஓடையில் பதிக்கப்பட்ட குழாயில் உடைப்பு, தூய மார்ட்டின் துவக்கப் பள்ளி அருகில் உடைப்பு, வெல்டன் கிளப் விளையாட்டு மைதானம் அருகில் உடைப்பு, சுப்பிரமணியபுரம் பஸ் ஸ்டாப் அருகில் உடைப்பு உள்பட பல இடங்களில் ஏற்பட்டுள்ள உடைப்புகளை அதிகாரிகள் இன்னும் சீரமைக்காததால் குடிநீர் பல மாதங்களாக வீணாகி வருகிறது.
கல்லூரி மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவ- மாணவியர், தேங்கியுள்ள தண்ணீரில் மிதித்து கடந்து செல்கின்றனர். இதனால் மாணவ- மாணவியருக்கு நோய் பரவும் நிலை மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இந்த குழாய் உடைப்பை சீரமைத்திட வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங். முன்னாள் தலைவர் ஜெயக்குமார் கூறுகையில், சுப்பிரமணியபுரத்தில் இருந்து சாயர்புரம் வரை உள்ள மெயின் ரோட்டில் 7 இடங்களில் உடைப்பு ஏற்பட்டு குடிதண்ணீர் பல மாதங்களாக வீணாகி வருகிறது.
இந்த குழாய் உடைப்பினால் தண்ணீர் வீணாவதோடு மட்டுமல்லாமல் சுப்பிரமணியபுரம் -சாயர்புரம் மெயின் ரோடும் குண்டும், குழியுமாக மாறி வருவதால் வாகன ஓட்டிகளும் சிரமப்பட்டு வருகின்றனர். பள்ளி, கல்லூரி வாசலில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தேங்கி கிடப்பதால் மாணவ- மாணவியரும் மற்றும் பொதுமக்களும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், சாயர்புரம் பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர் குழாய் உடைப்பை உடனடியாக சீரமைத்திட வேண்டும், என்றார்.
