கோட்டை ஊழியருக்கு சரமாரி வெட்டு

 

சென்னை: கொடுங்கையூரில் தலைமைச் செயலக ஊழியரை சரமாரியாக கத்தியால் வெட்டிய இருவரை போலீசார் கைது செய்தனர். கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 6வது பிளாக் 154வது தெருவைச் சேர்ந்தவர் அன்பு (42), தலைமைச் செயலகத்தில் உள்ள சமூக நலத் துறையில் ஓட்டுனராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் அன்பு அப்பகுதியில் உள்ள பூங்கா அருகே மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 5 பேர் கும்பல் அன்புவை சரமாரியாக கத்தியால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த அன்புவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதுகுறித்து கொடுங்கையூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். மேலும், எஸ்ஐ ஜோதிமணி தலைமையிலான போலீசார் நேற்று கொடுங்கையூர் முத்தமிழ் நகர் பகுதியைச் சேர்ந்த தினேஷ் (36), கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (34) ஆகியோரை கைது செய்து விசாரித்தனர். அதில், வேலு என்பவரை அன்பு தாக்கியதால் ஆத்திரமடைந்த தனது நண்பர்களான தினேஷ், சந்தோஷ் உள்ளிட்ட 5 பேருடன் சென்று வேலுவை வெட்டியது தெரியவந்தது. இவ்வழக்கில் மேலும், சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: