இடைப்பாடி : இடைப்பாடி அருகே, வீடு வாடகைக்கு கேட்பது போல் நடித்து, பெண்ணிடம் 5 பவுன் செயினை பறித்து சென்ற 2 வாலிபர்கள போலீசார் கைது செய்தனர்.சேலம் மாவட்டம், இடைப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட வெள்ளாண்டிவலசு பகுதியில் வசிப்பவர்கள் சீனிவாசன்- சரஸ்வதி தம்பதியினர்.
கடந்த 18ம் தேதி பகல் நேரத்தில், வீட்டில் தனியாக இருந்த சரஸ்வதியிடம் முகமூடி அணிந்து வந்த வாலிபர் ஒருவர், வீடு வாடகைக்கு கிடைக்குமா என விசாரித்தபடி, திடீரென சரஸ்வதியின் கழுத்தில் இருந்த 5 சவரன் தங்க செயினை பறித்துக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்திற்குள் தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து இடைப்பாடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் பேபி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தார்.
இந்நிலையில் வீரப்பம்பாளையம் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக வந்த வாலிபரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததை தொடர்ந்து, போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று நடத்திய விசாரணையில், அவர் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மௌனிஸ் (19) என்பதும், சரஸ்வதியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
தொடர் விசாரணையில், வெள்ளாண்டிவலசு பகுதியைச் சேர்ந்த குரு விக்னேஷ் (21) என்ற வாலிபர் செயின் பறிப்புக்கு உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், திருட்டுக்கு பயன்படுத்திய டூவீலர் மற்றும் 5 பவுன் நகையை பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் இடைப்பாடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
