நாடு முழுவதும் ரூ.5,978 கோடி மோசடி ஹீரா குழும நிறுவனரின் ரூ.159 கோடி அசையா சொத்துக்கள் ஏலம்: அமலாக்கத்துறை அதிரடி

திருமலை: நாடு முழுவதும் ரூ.5,978 கோடி மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில் ஹீரா குழும நிறுவனரின் ரூ.159 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கதுறை ஏலம் விட்டது. ஹீரா குழும நிறுவனர் நவ்ஹேரா ஷேக். இவருடன் தொடர்புடைய நிறுவனங்கள் நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்களிடமிருந்து ஆண்டுக்கு 36 சதவீதம் அதிகமான வட்டி தருவதாக கூறி ரூ.5,978 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளனர்.

ஆனால் கூறியபடி பணம் தரவில்லை. தாங்கள் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த முதலீட்டாளர்கள் ஐதராபாத் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் அமலாக்கத்துறை, பணமோசடி தடுப்புச்சட்டத்தின் கீழ் ஹீரா குழுமத்திற்கு சொந்தமான பல சொத்துக்களை பறிமுதல் செய்தது. தொடர்ந்து இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளின்படி, ஹீரா குழும நிறுவனர் நவ்ஹேரா ஷேக்கின் சொத்துக்களான சுமார் ரூ.159 கோடி மதிப்புள்ள 23 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை ஏலம் விட்டனர். இந்த ஏலம் மிகவும் வெளிப்படையான முறையில் நடத்தப்பட்டதாகவும், இதன் மூலம் திரட்டப்பட்ட ரூ.159 கோடி பாதிக்கப்பட்டவர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் வழங்கப்படும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: