மும்பை: தொகுதி மக்களின் கோபத்திற்கு அஞ்சுவதால் சில அதிருப்தி எம்பிக்கள் தங்கள் கட்சியுடன் தொடர்பில் இருப்பதாக சிவசேனா (உத்தவ்) கட்சி எம்பி சஞ்சய் ராவத் கூறி உள்ளார். மகாராஷ்டிராவில் சிவசேனா (உத்தவ்) கட்சியை சேர்ந்த 6 எம்பிக்கள் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சமீபத்தில் டெல்லியில் நடந்த கட்சி ஆலோசனை கூட்டத்தை அவர்கள் புறக்கணித்ததை தொடர்ந்து இத்தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதன் பின்னணியில் பாஜ இருப்பதாக கூறப்படும் நிலையில், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான ஒரே ஒரு சிவசேனா மட்டுமே இருப்பதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறி உள்ளார். இந்நிலையில், சிவசேனா உத்தவ் அணியின் எம்பி சஞ்சய் ராவத் நேற்று அளித்த பேட்டியில், ‘‘சில அதிருப்தி எம்பிக்கள் இன்னும் தொடர்பில் உள்ளனர்.
அவர்கள் தங்கள் தொகுதியில் நிலவும் மக்களின் கோபத்தை கண்டு அச்சமடைந்துள்ளனர். இதுவரை 2 பேர் தொடர்பில் உள்ளனர். தவறு செய்து விட்டதாக கருதினால் மற்றவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம். சிவசேனாவை எவ்வளவு அதிகமாக பாஜ அவமதிக்கிறதோ அந்தளவுக்கு மாநில மக்கள் எதிராக நிற்பார்கள். அதிருப்தி எம்பிக்கள் இன்னும் சிவசேனா உத்தவ் அணியுடனே உள்ளனர். 6 எம்பிக்களும் விலகவில்லை’’ என்றார்.
