கந்தர்வக்கோட்டை, ஜூன் 22: கந்தர்வக்கோட்டை நகர் பகுதியில் பன்றிகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருவதோடு, தொற்று நோய் பரவும் அபாயம் எழுந்து அச்சத்தை தந்து கொண்டிருகிறது. கந்தர்வக்கோட்டை நகர் பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகள், கடைகள் அமைந்துள்ளது. இந்த சாலை வழியாக தஞ்சை, செங்கிப்பட்டி, புதுக்கோட்டை, ஆலங்குடி, பட்டுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அரசு பஸ் மற்றும் அனைத்து ரக வாகனங்களும் தினந்தோறும் சென்று வருகின்றன. போக்குவரத்து மிகுந்த இந்த பகுதியில் எப்போதும் பொது மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும்.இந்த நிலையில் சாலையில் ஆங்காங்கே பல்வேறு இடங்களில் நாய்கள், பன்றிகள், மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக நகரில் பன்றிகள் அதிக அளவில் சுற்றித் திரிவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இவைகள் சாக்கடைக்குள் உருண்டு, புரண்டு எழுந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்து விடுகின்றன.
