பெரம்பலூர், ஜூன் 24: பெரம்பலூர் மாவட்டத்தில் ஒன்றிய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள விபி ஜிராம் ஜி திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் விவசாயிகள் மனு அளித்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராஜாங்கம் தலைமையில், மாவட்ட தலைவர் தனராஜ் உள்ளிட்டோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது: கடந்த 2025 டிசம்பர் 16ம்தேதி நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும், மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலை உறுதியளிப்புச் சட்டத்திற்கு பதிலாக விபி ஜிராம் ஜி திட்டம் அறிமுகம் செய்து நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆனால் புதிய சட்டத்தில் 40 விழுக்காடு நிதிப் பொறுப்பை மாநிலங்கள் தலையில் சுமத்துவது கடுமையாக திட்டச் செயல்பாட்டை பாதிக்கும். விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட ஊரக பகுதி உடல் உழைப்பு தொழிலாளர்களின் சட்டப்பூர்வ வேலை பெறும் உரிமையை மறுக்கும் விபி ஜிராம் ஜி சட்டத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும். ஜூலை முதல் தேதியிலிருந்து விபி ஜிராம் ஜி சட்டம் அமலாக்கப்படும் என்ற ஒன்றிய அரசின் அறிவிப்பை திரும்ப பெற வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு சட்டத்தை மேலும் பலப்படுத்தி வேலை அட்டையில் உள்ள தொழிலாளர்கள் அனைவருக்கும் ஆண்டுக்கு 200 நாள் வேலை வழங்கவும், தினசரி குறைந்தபட்ச உதயமாக ரூ. 700 வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தும் விண்ணப்பங்களை பாரத பிரதமர் மற்றும் ஒன்றிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் ஆகியோருக்கு கலெக்டர் தங்கள் வழியாக அனுப்பி வைக்கிறோம். எங்கள் சங்க கோரிக்கையை பிரதமர் மற்றும் மத்திய அமைச்சருக்கு கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.
