நீட் தேர்வுக்கு தயாராகி வந்த ஓசூர் மாணவன் தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது

ஒசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி, பாகலூர் சாலையில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி குடியிருப்பு வாரியத்தில் வசிப்பவர் சின்னசாமி. இவர் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு ஜீவானந்தம், வெற்றியானந்தம் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இளைய மகன் வெற்றியானந்தம்(20) கடந்த மூன்று ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு படித்துவந்தார். இதுவரை எழுதிய மூன்று தேர்வுகளிலும் தேர்ச்சி பெறவில்லை. கடந்த மாதம் 3 ம்தேதி நடந்த நீட்தேர்வு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து இன்று மீண்டும் நீட் மறுதேர்வு நடைபெற்றது.

மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த மாணவன் வெற்றியானந்தம் நீட் தேர்வுக்காக தீவிரமாக படித்து வந்துள்ளார். இன்று காலை தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்த மகனிடம், சின்னசாமி ‘நன்றாக தேர்வு எழுதுமாறு’ கூறிவிட்டு வழக்கம் போல வேலைக்கு சென்றுள்ளார். வெற்றியானந்தத்தின் தாய் கடைக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், வெற்றியானந்தம் மீண்டும் நீட் தேர்வில் தோல்வியை தழுவி விடுவோமோ என்ற பயத்தில், வீட்டு வராண்டாவில், ‘பெற்றோர், சகோதரர் கிடைக்க நான் கொடுத்து வைத்தவன் நீட் தேர்வு பயம் காரணமான கடந்த ஒரு மாதமாக சரியாக தூங்கவே இல்லை, இம்முறையும் தோல்வி அடைந்துவிடுவேன் என்கிற பயத்தில் தவறான முடிவை எடுக்கிறேன்’ என உருக்கமாக கடிதம் எழுதி வைத்து தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்துவந்த போலீசார்உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: