வெள்ளகோவில்-சங்ககிரி தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணியில் தரமில்லாத சாலைகள் அமைக்கப்படுவதாக குற்றச்சாட்டு: பணி மந்தமாக நடைபெறுவதால் வாகன ஓட்டிகள் அவதி

 

மொடக்குறிச்சி: வெள்ளகோவில் – சங்ககிரி தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி மந்தமாக நடப்பதாகவும், தரமில்லாத சாலைகள் போடப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஈரோட்டில் இருந்து வெள்ளகோவில் செல்லும் ரோடு மாநில நெடுஞ்சாலை ரோடாக இருந்தது. வெள்ளகோவில் செல்லும் ரோட்டில் மொடக்குறிச்சி, எழுமாத்தூர், எல்லைக்கடை, விளக்கேத்தி, முத்தூர், மாந்தபுரம் உள்ளிட்ட முக்கிய ஊர்கள் உள்ளது. மேலும் வெள்ளகோவில் செல்லும் ரோட்டின் வழியாக தினசரி ஏராளமான பேருந்துகள், கார் மற்றும் லாரி, கனரக வாகனங்கள் போன்றவை அதிகளவில் சென்று வருகிறது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகனங்கள் கடும் போக்குவரத்து நெரிசலை சந்தித்து வருகிறது.

இவ்வழியாக அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கல்லூரிகள் செயல்பட்டு வருவதால் காலை மற்றும் மாலை வேலைகளில் பள்ளி மற்றும் கல்லூரி பஸ்கள் அதிகளவில் செல்கிறது. இதனையடுத்து, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மாநில நெடுஞ்சாலையாக இருந்த வெள்ளகோவில் ரோட்டை, வெள்ளகோவில் – சங்ககிரி தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து வெள்ளகோவில் ரோட்டை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளகோவில் இருந்து நொய்யல் ஆறு வரை ஏழு மீட்டர் கொண்ட சாலையை 10 மீட்டராக அகலப்படுத்தி சாலை அமைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஈரோடு மாவட்டம் சின்னியம்பாளையம் முதல் நொய்யல் ஆற்று பாலம் வரை உள்ள வெள்ளகோவில் ரோட்டை 7 மீட்டரில் இருந்து 10 மீட்டராக அகலப்படுத்துவதற்கு தேசிய நெடுஞ்சாலை துறையின் மூலம் ஆண்டு திட்ட நிதியின் கீழ் ரூ.48 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சின்னியம்பாளையத்தில் இருந்து நொய்யல் ஆற்று பாலம் வரை சாலையின் இடையே 24 சிறு பாலங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதேபோல் சாலையை அகலப்படுத்துவதற்காக சாலையின் ஓரத்தில் உள்ள சுமார் 300க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டி அகற்றப்பட்டது.

10 மீட்டர் சாலை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சின்னியம்பாளையத்தில் இருந்து முத்தூர் ஆற்று பாலம் வரை சிறு பாலங்கள் அமைக்கப்படும் பகுதிகளில் பணிகள் மந்தமாக நடைபெற்று வருகிறது. அதேபோல் பாலங்கள் இல்லாத பகுதிகளில் சாலைகள் அகலப்படுத்தப்பட்டு தார் சாலையாக அமைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சின்னியம்பாளையம், நஞ்சை ஊத்துக்குளி, மொடக்குறிச்சி, மண்கரடு, உச்சிமேடு போன்ற பகுதிகளில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஒரு சில பகுதிகளில் சாலை அமைக்கும் பணி மந்தமாக நடைபெற்று வருகிறது. மேலும் ஏற்கனவே அமைக்கப்பட்ட சாலை தரம் இல்லாததால் ஆங்காங்கே பெயர்ந்து வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு தரம் இல்லாத சாலைகளாக அமைக்கப்பட்டு உள்ளது. வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நெடுஞ்சாலைத்துறைக்கு கோரிக்கை விடுத்ததை அடுத்து ஒரு சில இடங்களில் போடப்பட்ட சாலையை கொத்தி எடுத்து மீண்டும் தார் சாலை அமைக்கப்பட்டது. சங்ககிரி-வெள்ளகோவில் சாலை அமைக்கும் பணி மந்தமாக நடைபெற்று வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

இந்நிலையில் சங்ககிரி – வெள்ளகோவில் சாலை அமைக்கும் பணியில் தரமான சாலை அமைக்க வேண்டும் அதேபோல் முக்கிய ஊர்களில் சாலையின் நடுவே வாகன ஓட்டிகளின் வேகத்தை குறைத்து விபத்துக்கள் ஏற்படாத வண்ணம் தடுப்புகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: