கோவை: கோவை சிறுவாணி அணை சீரமைக்க 64 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என கேரள அரசு தமிழக குடிநீர் வடிகால் வாரியத்திடம் வலியுறுத்தியுள்ளது. கேரள மாநிலம் பாலக்காட்டில் சிறுவாணி அணையின் மேம்பாட்டு திட்டம் தொடர்பான இரு மாநில அதிகாரிகளின் கூட்டு குழு கூட்டம் நடந்தது. இதில் கேரள நீர்பாசனத்துறை அதிகாரிகள், தமிழக குடிநீர் வடிகால் வாரியம், ேகாவை மாநகராட்சி மற்றும் பாலக்காடு மாவட்ட நிர்வாகத்தினர் பங்கேற்றனர். கூட்டத்தில் சிறுவாணி அணையின் பாதுகாப்பு, மேம்பாட்டு திட்டங்கள் குறித்து பேசப்பட்டது. அப்போது அணையின் பக்க சுவர் வலு குறைந்து வருகிறது. கடந்த 1983ம் ஆண்டில் அணை கட்டப்பட்டது. அதற்கு பின் பக்க சுவர் பலமாக்கப்படவில்லை. பக்க சுவரில் நீர் கசிவு இருக்கிறது.
புனே பகுதியிலிருந்து தொழில் நுட்ப குழு ஆய்வு செய்தது. இந்த பணிகளை செய்து முடிக்க 93 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு போடப்பட்டது. இதில் பல்வேறு ஆலோசனைக்கு பின்னர் 64 கோடி ரூபாய் செலவில் அணை பலமாக்கும் பணியை நடத்தலாம். 3 வகையாக அதிக அழுத்தத்தில் சிமெண்ட், வேதிப்பொருட்கள் கலவையை சிறு துளை வழியாக அணையின் பக்க சுவரில் செலுத்த வேண்டும். இந்த பணியை சிறப்பாக செய்தால் அணை பலமாக இருக்கும் என கேரள நீர் பாசனத்துறையினர் தெரிவித்தனர். இதற்கு தமிழக குடிநீர் வடிகால் வாரியத்தினர் ஒப்பு கொண்டனர். மேலும் திட்ட மதிப்பீடு தொகை ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டு விரைவில் தொகை பெற திட்டமிடப்பட்டுள்ளது. சிறுவாணி அணை கேரள அரசின் பராமரிப்பில் இருக்கிறது. நீர் உபயோக உரிமை தமிழகத்திற்கு இருக்கிறது.
அணையின் மொத்த நீர் தேக்க கொள்ளளவு 650 மில்லியன் கன அடி. நீர் தேக்க பரப்பு 22.47 சதுர கி.மீ , அணையின் நீளம் 203 மீட்டர், உயரம் 57 மீட்டர், மொத்த நீர் மட்ட உயரம் 878.50 மீட்டர் (கடல் மட்ட உயர கணக்கின் படி) இருக்கிறது. தற்போது அணைக்கு செல்லும் வனப்பகுதி ரோடு சீரமைக்கப்பட்டு வருகிறது. கோவை வழியாக சிறுவாணி அணைக்கு செல்லும் ரோடு சீரமைக்க தமிழக அரசிடம் நிதி கோரப்பட்டுள்ளது. அணையை தூர் வாரி சீரமைக்கும் திட்டம் தொடர்பாக ஆலோசனை செய்யப்படவில்லை. சிறுவாணி நீர் எடுப்பு நிலையம் கட்டி 45 ஆண்டு கடந்து விட்டது. இந்த டவர் வழியாக தான் சிறுவாணி அடிவாரத்திற்கு குகை (டணல்) வழியாக குடிநீர் பெறப்படுகிறது.
நீர் எடுப்பு நிலையத்தின் விட்டம் 6 மீட்டர். உயரம் 29.5 மீட்டர். நீர் எடுக்கும் குழாயின் அளவு 900 மி.மீ, 4 குழாய் வழியாக குடிநீர் பெறப்பட்டு வருகிறது. குகை பாதை 1.55 கி.மீ தூரத்திற்கு உயர்ந்த மலையின் இடையே உருவாக்கப்பட்டுள்ளது. நீர் எடுப்பு டவர், குகை பாதை சீரமைப்பு பணி நடத்த தனியாக பட்ஜெட் தயாரிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. ஆனால் கேரள அரசு இனி பழைய நீர் எடுப்பு டவர் வேண்டாம், அதற்கு பதிலாக புதிதாக நீர் எடுப்பு டவர் கட்டலாம். இந்த டவர் ஹைட்ராலிக் முறையில் புதிய தொழில் நுட்பத்தில் ஆன்லைனில் இயக்கும் வகையில் மேற்கொள்ள வேண்டும். இப்போதுள்ள பழைய டவரில் ஆட்கள் இறங்கி வால்வு திறக்க வேண்டும்.
டவர் அபாய கரமாக இருப்பதால் உள்ளே இறங்குவதில் அச்சம் இருப்பதாக தெரிவித்தனர். எனவே நீர் எடுப்பு டவர் கட்ட தனி திட்ட மதிப்பீடு தயார் செய்யப்படவுள்ளது. அணையின் பக்க சுவர், ரோடு, நீர் தேங்கும் பகுதி சீரமைப்பு பணிகளை விரைவாக செய்ய வேண்டும் என தமிழக குடிநீர் வடிகால் வாரியத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
