சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசி சட்டமன்ற தொகுதி தவெக மாவட்டச் செயலாளர் மாரிச்செல்வம், சிவகாசி தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென கட்சியில் சேர்ந்த கீர்த்தனாவிற்கு சீட் வழங்கப்பட்டது. இவர் வெற்றி பெற்ற நிலையில், தொழில்துறை அமைச்சராகவும் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டச் செயலாளர் மாரிச்செல்வம் – அமைச்சர் கீர்த்தனா இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.
சிவகாசி அருகே விஸ்வநத்தம் கிராமத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர் கீர்த்தனா சிகலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதற்கு மாவட்டச் செயலாளர் மாரிச்செல்வம் அழைக்கப்படவில்ைல என தெரிகிறது. இதுகுறித்து விழாவில் பங்கேற்ற மாரிச்செல்வத்தின் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பினர். இதனால் இருதரப்பு ஆதரவாளர்கள் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது திருமண மண்டபத்தின் வெளியே அமைச்சர் கீர்த்தனாவை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பேனர் கிழிக்கப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அமைச்சருக்கு எதிராக களமிறங்கிய அமைச்சர்
சிவகாசியில் மோதல் சம்பவம் நடைபெற்ற சில மணிநேரங்களில் அதே பகுதிக்கு மாவட்டச் செயலாளர் மாரிச்செல்வம் ஏற்பாடு செய்திருந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு ராஜபாளையம் தொகுதி எம்எல்ஏவும், சமூக நலத்துறை அமைச்சருமான ஜெகதீஸ்வரி வந்திருந்தார். விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் ஜெகதீஸ்வரி, ‘‘இந்த பகுதியில் மக்கள் பிரச்னைகளை மாவட்டச் செயலாளர் மாரிச்செல்வத்திடம் கூறுங்கள். உங்களுடைய கோரிக்கை நிவர்த்தி செய்யப்படும்’’ என அமைச்சர் கீர்த்தனாவின் பெயரை சொல்லாமல் மாவட்டச் செயலாளர் மாரிச்செல்வத்தின் பெயரை குறிப்பிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
