ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் அமைச்சரின் ஆய்வின்போது, பக்தர்கள் இரண்டு பிரிவாக பயங்கரமாக மோதிக் கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன்ராஜா நேற்று சாமி தரிசனம் செய்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் கோயிலில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து இணை ஆணையர் மற்றும் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அமைச்சர் ஆய்வு நடத்திக் கொண்டிருந்தபோதே, சென்னை, தர்மபுரி பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் இரு பிரிவினர் பொது தரிசன வரிசை வழியாக சுவாமி தரிசனத்திற்கு சென்றுள்ளனர்.
நீண்ட வரிசையில் சென்று கொண்டிருந்தபோது, ஒருவருக்கொருவர் இடித்துக் கொண்டதில் அவாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அது தள்ளுமுள்ளுவாக மாறிய நிலையில் சுவாமி தரிசனத்தை முடித்து விட்டு, கோயிலில் இருந்து வெளியேறும் முன் அம்மன் மண்டபம் பகுதியில் ஒருவரை ஒருவர் பயங்கரமாக தாக்கி கொண்டனர். இந்த மோதலை பார்த்த பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பணியில் இருந்த போலீசார், பக்தர்கள் மோதலை விலக்கி விட்டு அனுப்பி வைத்தனர். கோயில் அலுவலகத்தில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டு இருந்த நிலையில் பக்தர்கள் மோதிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தவெகவினர் சாலை நடுவே காரை நிறுத்தியதால் அவதி
ராமநாத சுவாமி கோயிலில் ஆய்வு செய்ய வந்த அமைச்சர் மதன்ராஜா வாகனத்தை பின் தொடர்ந்து தவெகவினர், கோயிலில் நான்கு ரத வீதியில் அணிவகுத்து வந்தனர். கோயில் ரதவீதியில் அரசு வாகனங்களை தவிர்த்து மற்ற வாகனங்கள் அனுமதி பெற்றே உள்ளே வரவேண்டும். ஆனால் 20க்கும் மேற்பட்ட தவெக கட்சிக்கொடி கட்டிய கார்கள் கிழக்கு ரத வீதியில் நிறுத்தப்பட்டன. ஆய்வு முடியும் வரை கார்கள் சாலையின் நடுவே நிறுத்தப்பட்டதால் தீர்த்த தரிசனத்திற்கு பக்தர்கள் கடும் நெருக்கடியுடன் சென்றனர். பக்தர்கள் சாலையில் நடந்து செல்வதில் கடும் சிரமம் ஏற்பட்டது. இதனால் கிழக்கு ரதவீதியில் பக்தர்களின் தேவைக்கு பல மணிநேரம் பேட்டரி வாகனம் இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.
