ரூ.1,600 கோடி நிலக்கரி மாயம்; காங். அரசில் கிளம்பிய பூதம்: அரசியலை உலுக்கும் பரபரப்பு பின்னணி என்ன?

  • சிங்கரேணி நிலக்கரி நிறுவனம், எஸ்சிசிஎல், இந்தியாவின் 2வது பெரிய நிலக்கரி உற்பத்தி நிறுவனம்.
  • தெலங்கானாவின் 6 மாவட்டங்களில் சுரங்கங்கள் உள்ளன.
  •  உரிமை: தெலங்கானா 51%, ஒன்றிய அரசு 49%
  •  ஊழியர்கள்: 43,000 பேர்.
  •  2024-25 நிதியாண்டில் இந்த நிறுவனத்தின் வரிக்குப் பிந்தைய லாபம், 6,394 கோடி
  •  2024-25 உற்பத்தி: 69.01 மில்லியன் டன்.

தெலங்கானா அரசியலில் கடந்த சில வாரங்களாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விவகாரம், சிங்கரேணி நிலக்கரி நிறுவனம் (எஸ்சிசிஎல்) தொடர்பானது. சுமார் 40 லட்சம் டன் நிலக்கரி ஆவண பதிவுகளில் இருப்பதாகக் காட்டப்பட்டாலும், அந்த அளவிலான நிலக்கரி உண்மையில் இருப்பில் இல்லை என்ற குற்றச்சாட்டு அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது. இந்த நிலக்கரியின் மதிப்பு சுமார் ரூ.1,600 கோடி எனக் கூறப்படுகிறது. இது சாதாரண நிர்வாகப் பிரச்சினை அல்ல; பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடு, அரசியல் பொறுப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்புகளின் திறன் குறித்து கேள்விகளை எழுப்பும் விவகாரமாக மாறியுள்ளது.

சுமார் 40 லட்சம் டன் நிலக்கரி கையிருப்பு தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள இந்த கேள்விகள், தெலங்கானா காங்கிரஸ் அரசுக்கு புதிய நெருக்கடியையும் தலைவலியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரச்னையை முதலில் கிளப்பியது, பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் செயல் தலைவர் கே.டி.ராமராவ். கடந்த ஜூன் 6ம் தேதி ஒன்றிய நிலக்கரி அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டிக்கு எழுதிய கடிதத்தில் இந்த விவகாரத்தை எழுப்பினார். சிங்கரேணி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பதிவுகளில் சுமார் 40 லட்சம் மெட்ரிக் டன் நிலக்கரி இருப்பு காட்டப்படுகிறது. ஆனால், உண்மையில் அந்த அளவிலான நிலக்கரி இருப்பில் இருப்பதாகத் தெரியவில்லை. இது தொடர்பாக ஒன்றிய நிலக்கரி அமைச்சகமும், சிஏஜி அலுவலகமும் ஏன் ஆய்வு நடத்தவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

இதை தொடர்ந்து, ஒன்றிய நிலக்கரி அமைச்சரும் மற்றும் பாஜவைச் சேர்ந்த செகந்தராபாத் எம்பியுமான ஜி.கிஷன் ரெட்டி, இந்த விவகாரத்தில் அவசர விசாரணை நடத்த கோரி, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு கடிதம் எழுதினார். ஜூன் 10ம் தேதி எழுதிய அந்தக் கடிதத்தில், சிங்கரேணி நிறுவனத்தின் கையிருப்பில் இருந்ததாகக் கூறப்படும் சுமார் 40 லட்சம் டன் நிலக்கரி, அதாவது சுமார் ரூ.1,600 கோடி மதிப்பிலான நிலக்கரி காணாமல் போயிருப்பதாக வெளியான தகவல்கள் கவலையை ஏற்படுத்தியுள்ளன. இந்த குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால், அது நிறுவனத்திற்கு மிகப்பெரிய நிதி இழப்பை ஏற்படுத்தியிருக்கும்.

இந்த குற்றச்சாட்டுகள் உண்மையாக நிரூபிக்கப்பட்டால், அது நிறுவனத்தின் நிதிநிலையையும் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களையும் கடுமையாக பாதிக்கக்கூடும். மேலும், தெலங்கானா அரசிடம் இருந்து பெற வேண்டிய தொகைகள் நிலுவையில் இருப்பதால் எஸ்சிசிஎல் ஏற்ெகனவே நிதிச் சுமையை எதிர்கொண்டுள்ளது. தெலங்கானா அரசிடம் இருந்து ரூ.51,500 கோடிக்கும் அதிகமான தொகை பெற வேண்டிய நிலையில் எஸ்சிசிஎல் உள்ளது. இந்த விவகாரத்தில் உண்மை நிலையை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும். நிறுவனத்தின் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் சரியாக செயல்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். நிறுவனத்தில் போதுமான கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் உள்ளனவா என்பதை அறிய அவசர விசாரணை நடத்தப்பட வேண்டும், என வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து குறித்து அவர் அளித்த பேட்டியில், “சிங்கரேணியில் நிலக்கரி கையிருப்புகளுக்கான கணக்குகள் சரியாக இல்லை. மோசடி நடந்திருக்கலாம் என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. இது தொடர்பாக ஊடகங்களில் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் உள்ளூர் தொழிலாளர்களும் எனக்கு கடிதம் எழுதி உண்மை நிலையை கண்டறியுமாறு கோரியுள்ளனர். அதனால்தான் மாநில அரசிடம் விளக்கம் கேட்டுள்ளேன். மேலும், சிங்கரேணி நிறுவனத்தின் தினசரி நிர்வாகத்தில் ஒன்றிய அரசின் பங்கு மிகவும் குறைவாகவே இருந்து வருகிறது,” என்றார்.

இதன் மூலம் தெலங்கானா காங்கிரஸ் அரசுக்கு புது நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்த நிறுவன நிர்வாகத்தில் ஒன்றிய அரசின் பங்கு குறைவு என்று குறிப்பிட்டுள்ளதன் மூலம், மேற்கண்ட மோசடி குற்றச்சாட்டுக்கு பொறுப்பேற்க வேண்டியது தெலங்கானா காங்கிரஸ் அரசுதான் என்பதில் பாஜ தனது நிலைப்பாட்டை முன்வைத்துள்ளது. இதுபோல், பிஆர்எஸ் தலைவரும் முன்னாள் எம்.எல்.சி.யுமான கே. கவிதா, சிங்கரேணி நிறுவனத்தை பாதுகாக்க காங்கிரஸ் அரசு தவறிவிட்டது. சிங்கரேணியில் நடைபெறும் நிலக்கரி மோசடிகள் அனைத்தும் துணை முதல்வர் மல்லு பாட்டி விக்ரமார்காவின் கண்முன்னே நடக்கின்றன. நிலக்கரி கையிருப்பு மற்றும் அதன் பற்றாக்குறை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கோரியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் மற்றும் பிஆர்எஸ் மூத்த தலைவர் டி. ஹரீஷ் ராவும் இந்த விவகாரத்தில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். நிலக்கரி கையிருப்பு மேலாண்மை, ஒப்பந்தங்கள், சோலார் திட்டங்கள் மற்றும் கொள்முதல் நடவடிக்கைகளில் முறைகேடுகள் நடந்துள்ளது என அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஒருபுறம் பாஜ விசாரணை கோருகிறது. மறுபுறம், சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை பிஆர்எஸ் முன்வைத்துள்ளது. அதே சமயம் காங்கிரஸ் அரசிடம் நிறுவன நிர்வாகம் உள்ளது. இதனால் சிங்கரேணி நிலக்கரி கையிருப்பு விவகாரம், தெலங்கானா அரசியலில் புதிய மோசடிக்கு வழி வகுத்துள்ளதாக நம்பப்படுகிறது. மேலும் இந்தியாவில் இதுவரை இல்லாத மிகப்பெரிய பொதுத்துறை நிறுவன சர்ச்சைகளில் ஒன்றாக மாறியுள்ளது.

காங்கிரசும் பாஜவும் ஒருவரை ஒருவர் காப்பாற்றும் முயற்சியா?
சிபிஐ விசாரணை கோரியுள்ள முன்னாள் அமைச்சர் மற்றும் பிஆர்எஸ் மூத்த தலைவர் டி. ஹரீஷ் ராவ், சிங்கரேணியில் 49 சதவீத பங்குதாரராக இருக்கும் ஒன்றிய அரசு கூட விசாரணைக்கு உத்தரவிடவில்லை, காங்கிரசும் பாஜவும் ஒருவரை ஒருவர் காப்பாற்றிக் கொள்கிறார்கள் என்ற நம்பிக்கை மக்களிடையே உருவாகும், என்று கூறியுள்ளார்.

10 ஆண்டுகளில் தெலங்கானாவின் மின் தேவை
நிலக்கரி மாயம் விவகாரத்தை மேலும் முக்கியமாக்குவது மாநிலத்தின் மின் தேவை. 2014ம் ஆண்டில் தெலங்கானாவின் உச்ச மின் தேவை சுமார் 6,000 முதல் 7,000 மெகாவாட் அளவில் இருந்தது. இன்று அது 18,000 மெகாவாட்டை தாண்டி விட்டது. அடுத்த 10 ஆண்டுகளில் மாநிலத்தின் மின் தேவை 34,000 மெகாவாட் வரை உயரும் என அதிகாரப்பூர்வ கணிப்புகள் தெரிவிக்கின்றன.

கையிருப்பு எவ்வளவு?
ஒன்றிய அரசு கடந்த மார்ச் மாதம் வெளியிட்ட புள்ளி விவரத்தின்படி, சிங்கரேணி நிலக்கரி நிறுவனத்தில் நிலக்கரி கையிருப்பு கடந்த மார்ச் 9ம் தேதி 6.07 மில்லியன் டன்களாகவும் (60.7 லட்சம் டன்கள்), மார்ச் 18ம் தேதி 5.75 மில்லியன் டன்களாகவும் (57.5 லட்சம் டன்கள்) இருந்தது என குறிப்பிட்டுள்து. தற்போது காணாமல் போனதாக கூறப்படுவது 40 லட்சம் டன் என்பது இந்த நிறுவனத்தின் ஓராண்டு உற்பத்தியின் சுமார் 5.8 சதவீதம் ஆகும். அதனால்தான் இந்த விவகாரம் பெரிய அரசியல் சர்ச்சையாக மாறியுள்ளது.

காங்கிரஸ் பிரமுகர்கள் தொடர்புடைய பரபரப்பை ஏற்படுத்திய ஊழல்கள்

  • கர்நாடகா வால்மீகி மேம்பாட்டு கழக நிதி முறைகேடு: கர்நாடக மகரிஷி வால்மீகி மேம்பாட்டு கழகத்தின் நிதி தவறாக மாற்றப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அமைச்சர் பி. நாகேந்திரா பதவி விலகினார்.
  •  ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில், ஜல் ஜீவன் திட்டத்தில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இது தொடர்பாக அமலாக்கத்துறை, ஊழல் தடுப்பு பிரிவு சார்பில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் மகேஷ் ஜோஷி வீட்டிலும் ரெய்டு நடந்தது.
  • சத்தீஸ்கர் மதுபான முறைகேடு வழக்கு: காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான மதுபான விநியோக முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை மற்றும் ஊழல் தடுப்பு குழு விசாரணை நடத்தியது. முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகலின் மகன் சைதன்ய பாகல் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
  • மகாதேவ் பெட்டிங் ஆப் வழக்கு: ஆன்லைன் சூதாட்ட தளமான மகாதேவ் ஆப் தொடர்பாக பணமோசடி மற்றும் அரசியல் ஆதரவு குறித்த குற்றச்சாட்டுகள் எழுந்தன. அமலாக்கத்துறை, சிபிஐ விசாரணை நடத்தின. சத்தீஸ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பாகல் உள்ளிட்ட பல முக்கிய காங்கிரஸ் தலைவர்கள், இந்த முறைகேட்டின் முக்கியக் குற்றவாளிகளிடம் இருந்து பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக அமலாக்க இயக்குநரகத்தால் குற்றம் சாட்டப்பட்டனர்.

Related Stories: