×

மகளிர் சுய உதவிக்குழு தயாரிப்புகளை உலக அளவில் சந்தைப்படுத்த வேண்டும்

*அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்ட மகளிர் திட்டத்தின் கீழ் மகளிர் சுயஉதவிக்குழுவினர் அரசின் கடனுதவியுடன் சுயதொழில் மற்றும் வீட்டிலிருந்தபடியே கைவினைப்பொருட்கள் விற்பனை செய்தல் உள்ளிட்ட தொழிலில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

அதனடிப்படையில் மாவட்ட கலெக்டர் பிரதாப், திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் தயாரிக்கும் கைவினைப்பொருட்களை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:

தமிழ்நாடு அரசானது பெண்கள் அனைவரும் ஆண்களுக்கு நிகராக இலாப நோக்கோடு தொழில் புரிந்து, பொருளாதாரத்தில் ஏற்றம் பெற வேண்டுமென பெண்கள் சுயத்தொழில் செய்ய பல்வேறு கடனுதவிகள் வழங்கி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொல்வேல் பகுதியில் சுயஉதவிக்குழுவினர் டாடாமேரி வீட்டில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்வியலை ஊக்குவிக்கும் வகையிலும், உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் வாழைநாரைக் கொண்டு பல்வேறு கைவினைப் பொருட்கள் செய்து வருகிறார்கள்.

வாழைநாரில் இருந்து தயாரிக்கப்பட்ட கூடைகள், மேஜை விரிப்புகள், பைகள், வீட்டு அலங்காரப் பொருட்கள் மற்றும் தொப்பிகள் உள்ளிட்டவைகள் நேரில் பார்வையிடப்பட்டது. அவற்றின் தரம் மற்றும் சந்தை வாய்ப்புகள் குறித்து சுயஉதவிக்குழுவினரிடம் கேட்டறியப்பட்டது.

தொடர்ந்து அருவிக்கரை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள கிராம ஊராட்சி சேவை மையத்தில் மகளிர் சுயஉதவிக்குழுவினர் 15 பேர் இணைந்து இயற்கை மற்றும் செயற்கை பூக்களை கொண்டு தயாரிக்கப்பட்ட பூங்கொத்துகள் நேரில் பார்வையிடப்பட்டது. பாரம்பரிய முறையோடு நவீன வடிவமைப்புகளையும் புகுத்தி, வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் பொருட்களைத் தயாரிக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டது.

மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் கைவினைபொருட்களை உலக அளவில் சந்தைப்படுத்த திட்ட இயக்குநர் மற்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.இவ்வாறு அவர் தெரிவித்தார். அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags : -Help Group ,Nagercoil ,Kanyakumari District ,Pratap ,Thiruvattar ,Panchayat… ,
× RELATED ஓசூர் மாநகரை சுற்றிலும் புதிய...