×

குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் ஊதிய குறைப்பை கண்டித்து தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

குன்னூர் : குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் தூய்மை பணியாளர்கள் ஊதிய குறைப்பை கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.​நீலகிரி மாவட்டம் ​குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் மொத்தம் 28 தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். கடந்த மாதம் வரை, இந்த மருத்துவமனையின் தூய்மை பணி ஒப்பந்தத்தை தனியார் நிறுவனம் எடுத்திருந்தது.

அந்த நிறுவனத்தின் கீழ் பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ.19,300 வழங்கப்பட்டு வந்தது. ​தற்போது, மருத்துவமனையின் தூய்மை பணி ஒப்பந்தம் மற்றொரு புதிய நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனம், பணியாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ.13,624 வழங்கப்படும் என்று முதலில் தெரிவித்திருந்தது. ​ஆனால், இந்த மாதம் பணியாளர்களுக்கு வெறும் ரூ.11,626 மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

முந்தைய மாத ஊதியத்தை விட இது மிகக் குறைவாக இருந்ததால் அதிர்ச்சியடைந்த பணியாளர்கள் இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர்.

தூய்மை பணியாளர்களின் புகாரை அடுத்து, “இதற்கும் எங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. ஒப்பந்ததாரரிடம் மட்டுமே நீங்கள் முறையிட வேண்டும்” என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கைவிரிப்பதாக பதில் அளிக்கப்பட்டுள்ளது.

​இதனைத்தொடர்ந்து, புதிய ஒப்பந்ததாரரை தொடர்பு கொண்டு கேட்டபோதும் முறையான மற்றும் திருப்திகரமான பதில் எதுவும் கிடைக்கவில்லை என பணியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த 28 தூய்மை பணியாளர்களும், தங்களுக்குத் தங்கு தடையின்றி முறையாகவும், முழுமையாகவும் ஊதியம் வழங்கப்பட வேண்டும் எனகிற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று மருத்துவமனை வளாகத்திலேயே அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ​

மருத்துவமனையின் அத்தியாவசிய பிரிவான தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் இந்த திடீர் போராட்டத்தால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Coonoor Government Lali Hospital ,Coonoor ,Nilgiris district ,
× RELATED பெரம்பலூர் அருகே டீசல் டேங்கர் லாரியில் திடீர் தீ விபத்து