- தமிழ்நாடு அரசு
- கடலூர்
- தமிழ்
- தமிழ்நாடு
- முதல் அமைச்சர்
- தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம்
*தலையில் முக்காடு போட்டு போராட்டம்
கடலூர் : பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி தலையில் முக்காடு போட்டு விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக முதல்வர் விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியின்படி கூட்டுறவு பயிர் கடனை தள்ளுபடி செய்ய கோரி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தலையில் முக்காடு போட்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். கடலூர் மாவட்ட தலைவர் வெங்கடேசன், பரமசிவம் முன்னிலை வகித்தனர். இதனைத் தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.
2026 தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியாக, தமிழக வெற்றிக்கழக கட்சியின் நிறுவனர் ஜோசப் விஜய், நாங்கள் வெற்றி பெற்றால் தமிழகத்தில் விவசாய கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தார்.
ஆனால் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் சிறு குறு விவசாயி பயிர் கடன் 50 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி என்று அறிவித்திருந்தார். அது விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. விவசாய கடன் 2.5 ஏக்கர் மற்றும் 5 ஏக்கர் சிறு குறு பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தார்.
ஆனால் தமிழக முதல்வர் சிறு குறு விவசாயிகளுக்கு ரூ.50000 மட்டும் தள்ளுபடி அறிவித்துள்ளார். இது ஏமாற்றம் அளிக்கிறது. ரூ.50000 விவசாய கடன் தள்ளுபடி மோசடி செயலாக கருதப்படுகிறது.
ரூ.60,000 பயிர் கடன் வாங்கியிருந்தால் 10 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி என்றும், 70000 ரூபாய் பயிர் கடன் வாங்கியிருந்தால் 15 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி என்றும், ஒரு லட்சம் ரூபாய் பயிர் கடன் வாங்கியிருந்தால் ரூ.5000 தள்ளுபடி என்றும் கூட்டுறவு வங்கியில் தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து மீண்டும் தமிழகம் முழுவதும் அனைத்து விவசாயிகளும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களும் நடத்தினோம்.
இருந்த போதிலும் இரண்டு தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் ரூ.75,000 பயிர் கடன் தள்ளுபடி என்று அறிவித்துள்ளார். அதற்கு மேல் பயிர் கடன் பெற்ற விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. தமிழக முதல்வர் அறிவித்துள்ள பயிர் கடன் மீண்டும் மீண்டும் எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது.
தமிழக முதல்வர் மறுபரிசீலனை செய்து சிறு குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வெள்ளாறு மணிமுத்தாறு இணையும் இடத்தில் தடுப்பணை கட்ட வேண்டும்,ஐ கோர்ட் உத்தரவுபடி கடலூர் மாவட்டத்தில் ஏரி, குளங்களில் விவசாயிகள் வண்டல் மண் எடுத்துக்கொள்ள கெடுபிடி காட்டாமல் அனுமதிக்க வேண்டும்.
கர்நாடக மாநிலத்திலிருந்து, காவிரி டெல்டா நெல் சாகுபடி விவசாயத்தை காப்பாற்ற 177.25 டி.எம்.சி. காவிரி நீரை மாதா மாதம் பெற்று தர உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு அணுக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த புதுநகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையில் போலீசார் விவசாயிகளை கலைந்து செல்லுமாறு கூறினார். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
