டெல்லி: நீட் தேர்வு முடியும் வரை டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை விதித்த மத்திய அரசின் முடிவு சரி தான் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான, ‘நீட்’ நுழைவுத் தேர்வு கடந்த மாதம், 3ம் தேதி நடந்தது. வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து, வரும் 21ல் மறுதேர்வு நடக்கிறது. இந்நிலையில் ‘டெலிகிராம்’ தகவல் பரிமாற்ற செயலியில், ‘நீட்’ மறுதேர்வு வினாத்தாள் விற்பனை செய்யப்படுவதாக வதந்தி பரவியது.
இதையடுத்து, வரும் 22 வரை, ‘டெலிகிராம்’ செயலியை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, ‘டெலிகிராம்’ நிறுவனம் டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த விவகாரத்தில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து நாட்டின் பாதுகாப்புக்கு ‘டெலிகிராம்’ தகவல் பரிமாற்ற செயலி அச்சுறுத்தலாக இருக்கிறது. பயங்கரவாதம், இணைய குற்றங்கள், நிதி மோசடி, போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களுக்கு அந்த செயலி துணை போகிறது என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதனை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்து இருந்தது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது அப்போது நீட் தேர்வு முடியும் வரை, டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை விதித்த மத்திய அரசின் முடிவு சரி தான் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உத்தரவிட்டது.
