கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பாக ராகுல் காந்தி புதிய பிரசாரம் தொடக்கம்

புதுடெல்லி: தேர்வு வினாத்தாள்கள் கசிவு, சிபிஎஸ்இ ஓஎஸ்எம் முறைகேடு உள்பட பல்வேறு கல்வித்துறை முறைகேடுகளுக்கு எதிராக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில் கல்வித்துறை சீர்திருத்தங்களை முன்னிலைப்படுத்தும் வகையில் சத்ரோன் கூஞ்ச் என்ற பெயரில் கையெழுத்து இயக்கம் ஒன்றை ராகுல் காந்தி தொடங்கி உள்ளார். இதுகுறித்து ராகுல் காந்தி தன் எக்ஸ் பதிவில், “தேர்வு வினாத்தாள் கசிவு, அதிக கட்டணம் வசூல் ஆகியவற்றால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், இந்த கல்வி முறை உங்கள் கனவுகளை சிதைத்திருந்தால் அல்லது உங்கள் குடும்பத்தினர் வாழ்நாள் சேமிப்புகளை உங்கள் கல்விக்காக செலவிட்டிருந்தால், மாணவர்களுக்கான குரல் என்ற இந்த இயக்கம் உங்களுக்கானதுதான்.

இது வெறும் பிரச்சார இயக்கம் மட்டுமல்ல, மலிவு விலையிலான கல்வி, நியாயமான தேர்வு முறைகள் மற்றும் கண்ணியமான வேலைவாய்ப்புகள் போன்ற பிரச்னைகளை மாணவர்கள் எழுப்புவதற்கான ஒரு தளம். உங்கள் கோரிக்கைகளை நேரடியாக அரசாங்கத்திடம் கொண்டு செல்வதற்கான தளம். இந்த இயக்கத்தில் இணைய கீழேவுள்ள இணைப்பை கிளிக் செய்து, உங்கள் பெயரை பதிவு செய்து, உங்கள் கருத்துகளை பகிருங்கள், மனுவில் கையெழுத்திடுங்கள். எந்தளவுக்குஅதிகமாக மாணவர்கள் இணைகிறீர்களோ அந்தளவுக்கு மாணவர்களின் குரல் ஓங்கி ஒலிக்கும்” என தெரிவித்துள்ளார். இதற்காக https://rahulgandhi.in/chhatron-ki-goonj என்ற இணையதளத்தின் இணைப்பையும் ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார்.

Related Stories: