×

செயற்கை நுண்ணறிவு கருவி எதுவாக இருந்தாலும் தகுதியுள்ள விரிவுரையாளருக்கு இணையாக முடியாது: உயர் நீதிமன்றம் கருத்து

சென்னை: போதுமான வருகைப்பதிவு இல்லாததால் செமஸ்டர் தேர்வெழுத அனுமதி மறுத்ததுடன், குறிப்பிட்ட அந்த கல்வியாண்டை மீண்டும் படிக்க வேண்டும் என்று தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் பிறப்பித்த உத்தரவுகளை எதிர்த்து சதீஷ் சாம் உள்ளிட்ட மாணவர்கள் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி, தேர்வெழுத அனுமதி மறுப்பு மற்றும் மீண்டும் ஓராண்டை படிப்பது உள்ளிட்ட விதிகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று பல்கலைக்கழகத்திற்்கு உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து பல்கலைக்கழகம் மற்றும் சீர்மிகு சட்டப்பள்ளி தரப்பில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீடு மனுக்களை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, தற்போதைய விதிகள் தெளிவாக உள்ளதாக கூறி மறு ஆய்வு செய்ய வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.

மேலும், கடுமையான போட்டிக்கு மத்தியில் மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரிகளில் மிகவும் கஷ்டப்பட்டு இடங்களை பெறுகிறார்கள். அந்த இடங்களின் மதிப்பை அவர்கள் உணர வேண்டியது அவசியம். ஆன்லைன் வகுப்புகள் ஒருபோதும் நேரடி கற்றல் முறைக்கு மாற்றாகமுடியாது. அதேபோல சாட் ஜி.பி.டி மற்றும் வேறு எந்த செயற்கை நுண்ணறிவு கருவியாலும் தகுதியான ஒரு விரிவுரையாளருக்கு இணையாக முடியாது. செயற்கை நுண்ணறிவு என்பது மனித நுண்ணறிவுக்கு மிக நெருக்கமாக வரமுடியும். ஆனால் நேர்மை, ஒழுக்கம், நெறிமுறை ஆகியவற்றை கற்றுத்தர முடியாது. இந்த பாடங்களை வகுப்பறையில் மட்டுமே கற்கமுடியும் என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

Tags : Chennai ,Satish Sam ,Dr. ,Ambedkar Law University of Tamil Nadu ,
× RELATED ‘தொல்குடி தொடுவானம்’ திட்டத்தில் 16...