மதுரை: கிள்ளியூர் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்துள்ளதால் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி ஐகோர்ட் கிளையில் தவெக வேட்பாளர் மனு தாக்கல் செய்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்குமார் வெற்றி பெற்றார். தற்போது இவர் தவெக அரசில் அமைச்சராகவும் உளளார். இந்த தொகுதியில் தவெக சார்பில் சபின் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இவர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: கிள்ளியூர் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையின்போது சுமார் 4,500 தபால் வாக்குகள் எண்ணப்பட வேண்டிய நிலையில், அதில் சுமார் 2,500 வாக்குகள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதுகுறித்து உடனடியாக தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் விளக்கம் கேட்டபோது, இறுதி முடிவை அறிவிப்பதற்கு முன்பு இந்த முரண்பாடுகள் குறித்து ஆய்வு செய்து விளக்கம் அளிக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். ஆனால் பின்னர் எந்தத் திருப்திகரமான விளக்கமும் வழங்கப்படவில்லை.
மேலும், 169ம் வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்குப்பதிவு தொடங்கிய நேரம் அதிகாலை 5.45 மணி எனக் காட்டியது, இயந்திரத்தின் செயல்பாடு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அதேபோல் சில வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டதால், பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை சரிபார்ப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டது. வாக்கு எண்ணிக்கையின் ஒவ்வொரு சுற்றின் முடிவுகளும் தனித்தனியாக அறிவிக்கப்பட்டு சரிபார்க்கப்பட வேண்டும் என நான் வலியுறுத்தினேன். ஆனால் 18, 19, 20, 21 மற்றும் 22ம் சுற்றுகளில் அவ்வாறு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுத்தப்படவில்லை.
இதனால் தேர்தல் செயல் முறையின் வெளிப்படைத்தன்மை குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளது. இதுதொடர்பாக கடந்த ஜூன் 5ம் தேதி அதிகாரிகளுக்கு மனு அனுப்பியும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, நீதிமன்றம் தலையிட்டு, கிள்ளியூர் தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் மற்றும் மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை மறுஆய்வு செய்யும் வகையில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்துமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். இது தேர்தல் வழக்கு என்பதால், இந்த மனு விரைவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
